புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனா தொற்றின் 2வது அலை தினமும் புதிய உச்சத்தை தொட்டே அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கட்டநடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனிடையே இந்தியாவில் தினந்தோறும் செய்யப்படும் கொரோனா பரிசோதனையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வீட்டிலேயே கொரோனா பரிசோதனை செய்துகொள்ளும் வகையில் புதிய மருத்துவ உபகரணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அனுமதி அளித்துள்ளது.
அதில் ஆராய்ச்சி கவுன்சில் மேலும் கூறியிருப்பதாவது:-
கொரோனா தொற்றை உறுதி செய்யும் ஆர்டிபிசிஆர் பரிசோதனைகள் தற்போது அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் தான் செய்து கொள்ள முடிந்தது.
இனி ஒருவருக்குக் கொரோனா தொற்று இருக்கிறதா இல்லையா என்ற பரிசோதனையை வீட்டிலேயே செய்துகொள்ள வழிவகை ஏற்பட்டிருக்கிறது. இந்த சோதனை உபகரணத்துக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ஐசிஎம்ஆர்) ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்த உபகரணத்தை புனேவைத் தலைமையிடமாகக் கொண்ட மைலேப் டிஸ்கவர் சல்யூஷன்ஸ் நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. இது ரேபிட் ஆன்டிஜன் டெஸ்ட் (rapid antigen test RAT) என்ற முறையில் செயல்பட்டு தொற்றை உறுதி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று அறிகுறிகள் உள்ளவர்கள் அல்லது கரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்தவர்கள் மட்டுமே இந்த உபகரணத்தை பரிசோதனைக்காகப் பயன்படுத்த வேண்டும் அனைவரும் பயன்படுத்தக் கூடாது என ஐசிஎம்ஆர் வழிகாட்டு நெறிமுறையையும் வெளியிட்டிருக்கிறது.
மேலும், தனிநபர்கள் இந்த உபகரணத்தைப் பயன்படுத்தி பரிசோதித்து பாசிட்டிவ் என்று வந்தால் அதை நூறு சதவீதம் உண்மையான பாசிடிவ் எனக் கருதி ஐசிஎம்ஆர் மற்றும் மத்திய சுகாதார அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி தனிப்படுத்திக் கொள்ள வேண்டும். மருத்துவர்களின் தகுந்த ஆலோசனையின்படி மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேவேளையில் ஆர்டி பிசிஆர் பரிசோதனையுடன் ஒப்பிடுகையில் இந்தவகை உபகரணங்கள் போலி நெகட்டிவிட்டியைக் காட்டவும் வாய்ப்புள்ளது. ஆனால், தொற்றால் பாதிக்கப்பட்ட நபரின் உடலில் வைரஸ் லோடு அதிகாமாகி அவர் மற்றவருக்கும் பரப்பும் நிலையில் இருக்கும்போது பரிசோதனை முடிவு தவறுவதற்கு வாய்ப்பில்லை என ஐசிஎம்ஆர் தெரிவித்திருக்கிறது.
பேத்தோ கேட்ச் (PathoCatch) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தக் கிட்டின் விலை வரிகள் உட்பட ரூ.250 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.