பெங்களூரு,
சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்று பெங்களூரு- பரப்பன அக்ரஹாராத்தில் உள்ள மத்திய சிறையில் இருந்த சசிகலா இன்று விடுதலை செய்யப்பட்டார். தொடர்ந்து சசிகலா சிகிச்சை பெற்று வரும் விக்டோரியா மருத்துவமனைக்கு சென்ற சிறைத்துறை அதிகாரிகள் சசிகலாவிடம் கையெழுத்து பெற்று விடுதலையை அறிவித்தனர். மேலும் இதுதொடர்பான எழுத்துபூர்வ அறிக்கையும் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் சசிகலாவுக்கு கொரோனா தொற்று இல்லாத நிலை தொடர்ந்தால் வரும் 31ஆம் தேதி அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று மருத்துவமனை நிர்வாகம் புதிய தகவல் வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக மருத்துவமனை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், சசிகலா இன்று (ஜன. 27) காலை 11 மணிக்கு விடுதலை செய்யப்பட்டார். கடந்த 20-ம் தேதி பவுரிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் 21 ஆம் தேதி விக்டோரியா அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் கொரோனா வழிமுறைகளின்படி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சசிகலா உடல் நிலை சீராக உள்ளது. 96/97 என்ற அளவில் ஆக்சிஜன் அளவு உள்ளது. கடந்த 12 மணி நேரம் செயற்கை சுவாசக் கருவியின் உதவி இல்லாமல் இருக்கிறார். சசிகலாவுக்கு நாளை மீண்டும் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. இந்த பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லாத நிலை தொடர்ந்தால் அதேபோன்று செயற்கை சுவாசக் கருவியின் உதவியின்றி 3 நாள்கள் இருந்தால் அனுமதிக்கப்பட்ட 10-வது நாளில் விடுதலை செய்யப்படுவார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக விக்டோரியா மருத்துவமனையில் சசிகலா தொடர்ந்து சிகிச்சை பெற குடும்பத்தார் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது.