மும்பை,
காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சாசன பிரிவு 370- ஐ கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி மத்திய அரசு அதிரடியாக ரத்து செய்தது. மாநிலமாக இருந்த ஜம்மு காஷ்மீரை ஜம்மு காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாவும் மத்திய அரசு பிரித்தது.
அதேபோல், ஜம்மு காஷ்மீரில் நிரந்தரக் குடியுரிமைகளைப் பெற்றவர்களுக்குச் சிறப்பு சலுகை வழங்கும் 35 ஏ- வும் ரத்து செய்யப்பட்டது. மத்திய அரசின் முடிவுக்கு ஜம்மு காஷ்மீரில் உள்ள அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
ஜம்மு காஷ்மீரில் பறிக்கப்பட்ட சலுகைகளை மீண்டும் மாநில மக்களுக்கு வழங்க வேண்டும் என குப்கார் அறிக்கை கூட்டமைப்பு ஒன்றையும் அங்குள்ள பிரதான கட்சிகள் தொடங்கியுள்ளன. குப்கார் அறிக்கைக்கான கூட்டமைப்பின் தலைவராக பரூக் அப்துல்லா நியமிக்கப்பட்டுள்ளார். ஜம்மு காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்தை மீண்டும் பெறுவது மட்டுமே எங்கள் ஒரே இலக்கு என கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், இந்தியாவில் சட்டப்பிரிவு 370-க்கு எந்த இடமும் கிடையாது என்று சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்செய் ராவத் தெரிவித்துள்ளார். இது குறித்து சஞ்செய் ராவத் கூறுகையில்,
பரூக் அப்துல்லா விரும்பினால், அவர் பாகிஸ்தானுக்குச் சென்று சட்டப்பிரிவு 370-ஐயும், 35 ஏ- வையும் அமல்படுத்திக்கொள்ளலாம். இந்தியாவில் இந்த இரண்டிற்கும் எந்த இடமும் கிடையாது என்றார். மராட்டியத்தில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் ஆதரவுடன் சிவசேனா கூட்டணி ஆட்சி நடத்தி வருவது கவனிக்கத்தக்கது.