ராய்ப்பூர்,
சத்தீஷ்கார் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. அங்குள்ள பழங்குடியினர் நலத்துறையின் கவுரலா-பென்ட்ரா-மர்வாகி மாவட்டத்துக்கான உதவி ஆணையர் கே.எஸ்.மஸ்ராம் வெளியிட்டுள்ள ஒரு உத்தரவு பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. உத்தரவில் அவர் கூறியிருப்பதாவது:-
மாவட்டத்தில் பழங்குடியினர் நலத்துறை நடத்தும் அலுவலகங்கள், உறைவிட பள்ளிகள், விடுதிகள் ஆகியவற்றில் பணியாற்றும் அதிகாரிகளும், ஊழியர்களும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். அதற்கான சான்றிதழை அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
அப்படி போட்டுக்கொள்ள தவறும் ஊழியர்களுக்கு அடுத்த மாத சம்பளம் முடக்கி வைக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இந்த உத்தரவு, சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது. இதற்கு ஏராளமானோர் எதிர்ப்பு தெரிவித்து பதிவிட்டனர்.
இதுகுறித்து கேட்டபோது, அதிகாரி மஸ்ராம் கூறியதாவது:-
பழங்குடியினர் நலத்துறையில் 100 சதவீதம் தடுப்பூசி போடச்செய்ய வேண்டும் என்பதே எனது நோக்கம். இந்த உத்தரவுக்கு பிறகு 95 சதவீத ஊழியர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். மற்றபடி, சம்பளத்தை முடக்கி வைக்கப் போவதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.