ஜெய்பூர்
ராஜஸ்தான் மாநிலத்தில் ராம்கர் தொகுதி எம்.எல்.ஏ., வாக இருப்பவர் கயன் தேவ் அகுஜா. இவர் பா.ஜ. வைச் சேர்ந்தவர். அல்வார் மாவட்டத்தில் பசுவை கடத்தி சென்ற ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். போலீசார் கைது செய்வதற்கு முன் மர்ம கும்பல் ஒன்று அவரை கடுமையாக தாக்கி உள்ளது. காயமடைந்த அந்த நபர் ஜாகிர் என தெரிய வந்துள்ளது. இந்நிலையில் ஜாகிர் கைது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கயன் தேவ், நான் ஒன்று மட்டும் தான் சொல்ல நினைக்கிறேன்.
பசுவை கடத்தினாலோ அல்லது வதை செய்தாலோ அவர்கள் நிச்சயமாக கொல்லப்படுவார்கள் என தெரிவித்துள்ளார். ஜாகிர் மீது மர்ம கும்பல் தாக்குதல் நடத்தியதை கயன் தேவ் திட்டவட்டமாக மறுத்துள்ளார். மேலும் இது குறித்து அவர் கூறுகையில், அவர் பசுவை கடத்திச் சென்ற லாரியை பொதுமக்கள் துரத்திச் சென்றுள்ளனர். அப்போது வாகனம் நிலைதடுமாறியதாலேயே அவர் காயமடைந்தார். ஆனால் தனது தவறை மறைப்பதற்காக கிராமத்தினர் தான் தன்னை தாக்கியதாக அவர் இப்போது கூறி வருகிறார் என கூறினார்.