புதுடெல்லி,
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கிராமின் கிரிசி மவுசம் சேவா திட்டத்தின் கீழ் லட்சக்கணக்கான விவசாயிகள் அந்த மையத்தில் பதிவு செய்து உள்ளனர். இந்த விவசாயிகளுக்கு வானிலை மாறுபாடு குறித்த தகவல்களை வானிலை மையம் அவ்வப்போது குறுந்தகவல் மூலம் தெரிவித்து வருகிறது.
இந்த நிலையில் வங்கக்கடலில் உருவான பானி புயல் இந்த மாத தொடக்கத்தில் ஒடிசா மற்றும் அண்டை மாநிலங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. 60-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். இந்த புயல் குறித்து வானிலை மையம் முன்கூட்டியே விடுத்த எச்சரிக்கை தகவல்களின் அடிப்படையில் மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டதால் சேதம் கட்டுப்படுத்தப்பட்டது.
இந்த புயல் தொடர்பாக 65 லட்சம் குறுந்தகவல்களை வானிலை மையம் அனுப்பியது தற்போது தெரியவந்துள்ளது. இதில் ஒடிசா, மேற்கு வங்காளம், அசாம், கர்நாடகா, தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களை சேர்ந்த விவசாயிகளுக்கு மட்டுமே 59 லட்சத்துக்கும் மேற்பட்ட குறுந்தகவல்கள் அனுப்பப்பட்டு உள்ளன.
அதில் வீட்டு கால்நடைகள், பறவைகளை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லுமாறும், அறுவடை பணிகளை தள்ளி வைக்குமாறும் அறிவுறுத்தப்பட்டு இருந்தது. அறுவடை செய்திருந்தால் அந்த விளைபொருட்களை பாதுகாப்பான இடங்களில் வைக்குமாறும் கூறப்பட்டு இருந்தது.