தேசிய செய்திகள்

கர்நாடக பட்ஜெட்டில் கனிமவளத்துறை தொடர்பாக முக்கிய அறிவிப்புகள் - மந்திரி முருகேஷ் நிரானி தகவல்

கர்நாடக பட்ஜெட்டில் கனிமவளத்துறை தொடர்பாக சில முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என மந்திரி முருகேஷ் நிரானி தெரிவித்துள்ளார்.

பெங்களூரு,

கனிமவளத்துறை மந்திரி முருகேஷ் நிரானியை பெங்களூருவில் உள்ள விகாச சவுதாவில் நேற்று கனிமவள மற்றும் கல்குவாரி தொழில் உரிமையாளர்கள் நேரில் சந்தித்து பேசினர். அப்போது, அவர்கள் மந்திரியிடம் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு கோரிக்கை விடுத்தனர்.

அதற்கு முருகேஷ் நிரானி, கனிமவளம் மற்றும் கல்குவாரி தொழில் முதலீடு செய்ய முன்வருபவர்களுக்கு தேவையான சலுகைகள் வழங்க அரசு தயாராக இருப்பதாக கூறினார். மணல், கல்குவாரி மற்றும் கனிம வள தொழில் செய்பவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளை தீர்க்க தான் தயாராக இருப்பதாகவும் மந்திரி உறுதியளித்தார். தொடர்ந்து மந்திரி முருகேஷ் நிரானி பேசியதாவது:-

அடுத்த 5 ஆண்டுகளுக்கு புதிய மணல் கொள்கை விரைவில் வெளியிடப்படும். இதில் பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும். கடைநிலை மக்களுக்கும் எளிதாக மணல் கிடைக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம். கனிமவளத்துறை தொடர்பாக சில முக்கிய அறிவிப்புகள் பட்ஜெட்டில் வெளியாகும்.

கர்நாடகத்தை தொழில் முதலீட்டிற்கு உகந்த மாநிலமாக மாற்றுவதே எனது முதல் நோக்கம். கனிமவளத்துறையில் ஏற்கனவே பல்வேறு முக்கியமான சீர்திருத்தங்களை மேற்கொண்டுள்ளோம்.

இவ்வாறு முருகேஷ் நிரானி பேசினார்.