புதுடெல்லி,
பிரபல தொழில் அதிபரும், கிங் பிஷர் குழுமத்தின் நிறுவனருமான விஜய் மல்லையா, நாட்டுடமையாக்கப்பட்ட வங்கிகளில் பல்லாயிரம் கோடி கடன்களை வாங்கி விட்டு, வட்டியுடன் அவற்றை திருப்பி செலுத்தாமல் இங்கிலாந்துக்கு தப்பி ஓடி விட்டார்.
இதேபோன்று, மும்பையை சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியும், இவரது நெருங்கிய உறவினரான மெகுல் சோக்சியும் பஞ்சாப் நேஷனல் வங்கி மூலமாக வெளிநாட்டினர் பலருக்கு சட்ட விரோதமாக சுமார் ரூ.13 ஆயிரத்து 400 கோடி பரிமாற்றம் செய்து மோசடியில் ஈடுபட்டு உள்ளதாக புகார் எழுந்தது. இந்த மோசடி அம்பலமாவதற்குள் நாட்டை விட்டு தப்பிய நிரவ் மோடி, லண்டனில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சோக்சி, ஆன்டிகுவா பார்படாஸ் நாட்டின் குடியுரிமை பெற்றுள்ள நிலையில், அங்கு இருக்கிறார். அவரை நாடு கடத்திக்கொண்டு வர இந்தியா நடவடிக்கை எடுத்து வருகிறது.
இப்படி தொழில் அதிபர்கள், பொருளாதார குற்றங்களை செய்து விட்டு தப்பி ஓடுவது தொடர்கதையாகி வருகிற நிலையில், சி.பி.ஐ., உள்ளிட்ட மத்திய புலனாய்வு அமைப்புகள், வங்கி மோசடியாளர்கள் தப்பி விடாதபடிக்கு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில் பாரத ஸ்டேட் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, ஆந்திரா வங்கி, ஓரியண்டல் பாங்க் ஆப் காமர்ஸ், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, அலகாபாத் வங்கி, கனரா வங்கி, தேனா வங்கி, சென்டிரல் பாங்க் ஆப் இந்தியா, யூனியன் பாங்க் ஆப் இந்தியா, ஐ.டி.பி.ஐ. வங்கி, பரோடா வங்கி, பாங்க் ஆப் மகாராஷ்டிரா, பாங்க் ஆப் இந்தியா, பஞ்சாப் அண்ட் சிந்த் வங்கி ஆகியவற்றில் ரூ.7 ஆயிரம் கோடி கடன் வாங்கி விட்டு திருப்பி செலுத்தாமல் மோசடி செய்தவர்கள் மீது 42 வழக்குகளை சி.பி.ஐ. பதிவு செய்துள்ளது.
இந்த வழக்குகளில் சிக்கிய நிறுவனங்களில் செல் மேனுபாக்சரிங்(பாங்க் ஆப் மகாராஷ்டிரா ரூ.113.55 கோடி), அட்வான்ஸ் சர்பேக்டண்ட்ஸ் (பாரத ஸ்டேட் வங்கி ரூ.118.49 கோடி), எஸ்கே நிட் (தேனா வங்கி ரூ.42.16 கோடி), கிருஷ்ணா நிட்வேர் டெக்னாலஜி (கனரா வங்கி ரூ.27 கோடி) உள்ளிட்டவை அடங்கும்.
இந்த மோசடிகளில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது பற்றி டெல்லியில் நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) சி.பி.ஐ. அதிகாரிகள் கூடி விவாதித்து, அதிரடி சோதனைகள் நடத்த முடிவு எடுத்ததாக தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறின.
அதன்படி, நேற்று சி.பி.ஐ.யின் சிறப்பு குழுக்கள், தமிழ்நாடு, ஆந்திரா, சண்டிகார், டெல்லி, குஜராத், அரியானா, கர்நாடகம், கேரளா, மத்திய பிரதேசம், மராட்டியம், பஞ்சாப், தெலுங்கானா, உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், தத்ரா நகர்வேலி ஆகிய 15 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 187 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.
தமிழ்நாட்டில் சென்னை, திருப்பூர், மதுரை, பழனி ஆகிய 4 நகரங்களில் இந்த சோதனை நடைபெற்றது.
பிற மாநிலங்களைப் பொறுத்தமட்டில் டெல்லி, நொய்டா, மும்பை, கல்யாண், தானே, புனே, பாராமதி, அமிர்தசரஸ், லூதியானா, கயா, குர்கான், சண்டிகார், போபால், சூரத், ஆமதாபாத், கான்பூர், காசியாபாத், வாரணாசி, கொல்கத்தா, பாட்னா, ஐதராபாத், டேராடூன், கொல்லம், கொச்சி உள்ளிட்ட இடங்களில் சோதனை நடந்தது.
இந்த சோதனைகளில் முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.