புதுடெல்லி,
இந்தியாவின் பாதுகாப்பு படைகளில் ஒன்றாக இந்தோ-திபெத் எல்லை போலீஸ் படை உள்ளது. சுமார் 90 ஆயிரம் பேரைக் கொண்ட இப்படை, சீனா உடனான அசல் கட்டுப்பாட்டு கோட்டு பகுதியை பாதுகாக்கும் பணியிலும், உள்நாட்டில் பல்வேறு பாதுகாவல் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறது. இப்படையினர் அரசு விதிப்படி மதுபான பாட்டில்கள் பெறலாம்.
ஆனால் அவர்கள் படையின் எந்தப் பிரிவில் பணி அமர்த்தப்பட்டிருக்கிறார்களோ, அங்குள்ள கேன்டீனில்தான் மதுபானங்களை பெற முடியும். அவர்களது சொந்த ஊருக்கு அருகில் உள்ள வேறு பிரிவு கேன்டீனில் மதுபானம் பெற முடியாது. அதற்கு தகுந்த மாதிரி ஏற்பாடு செய்ய வேண்டும் என்று நீண்டகாலமாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், முதல்முறையாக ஆன்லைன் மூலமாக மதுபான வினியோக நடைமுறையை இந்தோ-திபெத் போலீஸ் படை தொடங்கியுள்ளது. இதன்மூலம், பணிபுரியும் அல்லது ஓய்வுபெற்ற இப்படையினர், ஆன்லைன் கணக்கை தொடங்கி, தமக்கு அருகில் உள்ள படைப் பிரிவை தேர்வு செய்து அங்கு மதுபாட்டில்களை பெறலாம். இப்படை வீரர் ஒருவர், ஒரு மாதத்துக்கு 8 மதுபான பாட்டில்களையும், 6 பீர் கேன்களையும் பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.