தேசிய செய்திகள்

ஆதார் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு ஒத்திவைப்பு

ஆதார் வழக்கில் தீர்ப்பை அரசியல் சாசன அமர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.

புதுடெல்லி,

ஆதாரை கட்டாயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. இதில் தனிமனித அந்தரங்கத்தை பாதுகாப்பது அரசியல் சாசனம் வழங்கியுள்ள அடிப்படை உரிமையா? இல்லையா? என்பது பற்றி மட்டும் முதலில் விசாரிக்க முடிவு செய்யப்பட்டது. சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தலைமையில் 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கை விசாரித்து வந்தது.

மத்திய அரசு சார்பில் அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் ஆஜர் ஆகி வாதாடினார். 9 நீதிபதிகள் அமர்வில் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் மற்றும் நீதிபதிகள் ரோகின்டன் பாலி நாரிமன், சஞ்சய் கிஷன் கவுல், அபய் மனோகர் சாப்ரே, டி.ஒய்.சந்திரசூட், எஸ்.அப்துல் நிசீர், எஸ்.ஏ.பாப்டே, ஆர்.கே.அகர்வால், செல்லமேஸ்வர் ஆகியோர் இடம் பெற்று இருந்தனர்.

இந்த வழக்கில் நேற்று இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் அமர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.