புதுடெல்லி,
டெல்லியின் சோனியா விஹாரில் வசிக்கும் கிரிஷ்குமார் மற்றும் அவரது குழந்தை இஷிகா ( வயது 4) ஆகியோர் ஜமுனா பஜாரில் உள்ள அனுமன் கோவிலுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, மோட்டார் சைக்கிளில் முன் அமர்ந்திருந்த குழந்தை இஷிகாவின் கழுத்தை, எதிர்பாரத விதமாக காற்றில் பறந்து வந்த மாஞ்சா நூல் ஒன்று அறுத்துள்ளது.
இதில் இரத்தக்காயம் அடைந்த குழந்தையை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு, மருத்துவர்கள் குழந்தை மருத்துவமனைக்கு வருவதற்கு முன்னரே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.
இதையடுத்து, சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது. அதன்பேரில், இந்திய தண்டனை சட்டம் பிரிவு 304-ஏ வின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து, சம்பவம் நடந்த பகுதியின் சுற்றுவட்டாரங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், மாஞ்சா நூல் பயன்படுத்துவதையும், விற்பனை செய்வதையும் அரசு தடை செய்ததும், மீறினால் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்ததும் குறிப்பிடத்தக்கது.