தேசிய செய்திகள்

சிக்கிம் எல்லை டோக்லாமில் மீண்டும் ஆக்கிரமிப்பு சீனா வீரர்களை குவிக்கிறது

சிக்கிம் எல்லை டோக்லாமில் மீண்டும் ஆக்கிரமிப்பு சீனா வீரர்களை குவித்து வருகிறது.நேற்று 1800 கூடுதல் வீரர்கள் வந் துள்ளனர். இவர்கள் அங்கு கூடாரங்கள் அமைத்து தங்கியுள்ளனர்.

புதுடெல்லி,

சிக்கிம் எல்லையில் இந்தியா, சீனா, பூடான் நாடுகள் சந்திக்கும் டோக்லாம் பகுதியில் சீனப்படைகள் மேற்கொண்ட அத்துமீறிய சாலைப்பணிகளை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தினர். இதனால் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அங்கு இரு நாடுகளும் ராணுவத்தை குவித்தன. இந்திய படைகளை வாபஸ் பெறுமாறு சீனா அறிவுறுத்தியது. அங்கு போர் தொடுக்கப்போவதாக சீனா மிரட்டியது . இதனால் சிக்கிம் எல்லையில் 2 மாதம் போர்ப் பதற்றம் நீடித்து வந்தது.

பின்னர் இரு நாட்டு அதிகாரிகளும் இது குறித்து பேச்சு வார்த்தை நடத்தினர். மத்திய வெளியுறவு அமைச்சகம் டோக்லாம் பகுதியில் ஏற்பட்டுள்ள பிரச்சினை குறித்து தூதரக ரீதியாக சீனாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. இதை தொடர்ந்து டோக்லாமில் இரு நாடுகளும் படைகளை விரைவில் வாபஸ் பெறுவதென ஒப்புக் கொள்ளப்பட்டது இதனால் பதற்றம் முடிவுக்கு வந்தது.

இந்த நிலையில் இந்தியாவுக்கு சொந்தமான ஆளில்லா சிறிய விமானம் ஒன்று தங்கள் நாட்டு எல்லைக்குள் சமீபத்தில் ஊடுருவியதாகவும், பின்னர் அது தங்கள் எல்லைக்குள்ளேயே பிரச்சினைக்குரிய சிக்கிம் பகுதியில் நொறுங்கி விழுந்ததாகவும் சீனா புகார் கூறியது.

இது குறித்து இந்தியா விளக்கம் அளித்த ராணுவ அமைச்சகம் விடுத்துள்ள அறிக்கையில், இந்தியாவின் ஆளில்லா விமானம், இந்திய பகுதியில் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. அப்போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக அது கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பை இழந்தது. சிக்கிம் செக்டாரில் உள்ள அசல் கட்டுப்பாட்டு கோட்டை தாண்டி சென்றுவிட்டது. வழக்கமான நடைமுறைப்படி, இதுபற்றி இந்திய எல்லை பாதுகாப்பு படையினர், சீனாவுக்கு தெரியப்படுத்தி, அதை கண்டறியுமாறு கூறினர் என்று தெரிவித்தது.

இது குறித்து சீனா ஊடகம் குளோபல் டைம்ஸ் 'இந்தியா ஆளில்லா விமான ஊடுருவலுக்கு மன்னிப்புக் கோர வேண்டும்' என்ற தலைப்பில் தலையங்கம் எழுதி உள்ளது. மேலும் ஆளில்லா விமானத்தை இழந்ததை விட மோசமா விளைவுகளை இந்தியா சந்திக்கும் என கூறி உள்ளது.

இதற்கிடையே டோக்லாமில் சர்ச்சைக்குரிய பகுதியில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் கூடுதல் வீரர்களை சீனா இறக்கி வருகிறது. நேற்று 1800 கூடுதல் வீரர்கள் வந் துள்ளனர். இவர்கள் அங்கு கூடாரங்கள் அமைத்து தங்கியுள்ளனர்.

அதன் அருகில் இரண்டு ஹெலிகாபடர் இறங்கும் தளங்களை சீன ராணுவம் கட்டி உள்ளது. மேலும் அவை அருகில் அதிநவீன தங்கும் இடங்களையும் சீனா உருவாக்கி வருகிறது. சீனாவின் இந்த நடவடிக் கைகள் ஆக்கிரமிப்பை அதிகப்படுத்தியுள்ளது.

டோக்லாமில் சீன வீரர்கள் 1800 பேர் அதிகப்படுத்தப்பட்டு இருப்பதால் இந்தியாவும் அதிக வீரர்களை அனுப்ப தயாராகியுள்ளது. இதனால் டோக்லாமில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. டோக்லாம் அருகே சீனா நிரந்தரமாக தங்கும் வகையில் கூடாரங்களை அமைத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.