தேசிய செய்திகள்

மகாத்மா காந்தி நினைவு தினத்தையொட்டி, டெல்லியில் போராடும் விவசாய அமைப்பு தலைவர்கள் உண்ணாவிரதம்

மகாத்மா காந்தி நினைவு தினத்தையொட்டி டெல்லி போராட்ட களங்களில் விவசாய அமைப்பு தலைவர்கள் நேற்று உண்ணாவிரதம் இருந்தனர்.

டிராக்டர் பேரணி

வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் 2 மாதங்களுக்கு மேலாக போராடி வருகிறார்கள். அவர்களுடன் மத்திய அரசு 11 சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தியும் எந்த பலனும் எட்டப்படவில்லை.

இந்த போராட்டத்தை தீவிரப்படுத்தும் வகையில் குடியரசு தினத்தன்று தலைநகரில் விவசாயிகள் மாபெரும் டிராக்டர் பேரணி நடத்தினார்கள். இதில் வன்முறை வெடித்தது. போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் விவசாயிகளை கலைத்தனர்.

இதற்கு மத்தியிலும் விவசாயிகளின் ஒரு பகுதியினர் டெல்லி செங்கோட்டையில் மத கொடி ஒன்றை ஏற்றினர். இது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஊர் திரும்பிய விவசாயிகள்

இந்த வன்முறை சம்பவங்கள் தொடர்பாக விவசாய அமைப்பு தலைவர்கள் உள்பட ஏராளமானோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 200-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இந்த பேரணியை தொடர்ந்து விவசாயிகள் அனைவரும் மீண்டும் தங்கள் போராட்டக்களங்களுக்கு திரும்பி தங்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். அதேநேரம் டிராக்டர் பேரணி வன்முறையை காரணம் காட்டி சில அமைப்புகள் போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளன.

இதைப்போல டிராக்டர் பேரணி வன்முறையை தொடர்ந்து கணிசமான எண்ணிக்கையில் விவசாயிகள் ஊர் திரும்பி வருவதாகவும், இதனால் போராட்டக்களங்களில் மக்கள் கூட்டம் குறைந்திருப்பதாகவும் டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன.

உண்ணாவிரதம் இருந்தனர்

எனினும் போராடி வரும் அமைப்புகள் தங்கள் போராட்டத்தை வழக்கம் போல தீவிரமாக நடத்தி வருகின்றன.

இந்த நிலையில் தேசத்தந்தை மகாத்மா காந்தியின் நினைவு தினம் நேற்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, டெல்லியில் போராடி வரும் விவசாயிகள் தங்கள் போராட்டக்களங்களிலேயே உண்ணாவிரதம் இருந்தனர்.

இது போராட்டக்களத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.

விவசாயிகள் குவிகின்றனர்

இதற்கிடையே காஜிப்பூர் எல்லையில் போராடி வந்த விவசாய அமைப்பு தலைவர் ராகேஷ் திகாயத்தின் வேண்டுகோளை தொடர்ந்து டெல்லி போராட்டக்களங்களில் விவசாயிகள் மீண்டும் குவிய தொடங்கி உள்ளனர். குறிப்பாக இந்த போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என முசாபர்நகரில் நடந்த மகா பஞ்சாயத்தில் முடிவு செய்யப்பட்டதை தொடர்ந்து உத்தரபிரதேசத்தில் இருந்து ஏராளமான விவசாயிகள் காஜிப்பூருக்கு விரைந்துள்ளனர்.

இதைப்போல பஞ்சாப், அரியானாவிலும் ஏற்கனவே வீட்டுக்கு சென்ற விவசாயிகள் களம் திரும்பி வருகிறார்கள். இதனால் 3 எல்லைகளிலும் விவசாயிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிக எண்ணிக்கையில் விவசாயிகள் வந்து கொண்டிருப்பதால், வருகிற நாட்களில் இந்த போராட்டம் மேலும் வலுப்பெறும் என விவசாய அமைப்பு பிரதிநிதிகள் கூறியுள்ளனர்.

களை கட்டும் போராட்டக்களம்

இந்த இயக்கம் வலுவாக இருந்தது போல இன்னும் வலுவாக இருப்பதாக பாரதிய கிசான் யூனியனின் மீரட் மண்டல தலைவர் பவன் கடானா தெரிவித்தார். இந்த அமைதி போராட்டத்துக்கு கடைசி வரை ஆதரவு தெரிவிக்காமல் இடையிலேயே செல்ல முடிவெடுப்பவர்கள் தயவு செய்து போராட்டக்களங்களுக்கு வரவேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

டிராக்டர் பேரணி வன்முறை யால் ஊர் திரும்பிய விவசாயிகள் மீண்டும் போராட்டக்களம் திரும்பி வருவதால் டெல்லியில் விவசாயிகள் போராட்டக்களம் மீண்டும் களை கட்டத்தொடங்கி இருக்கிறது.

மராட்டியம்: 400 மீட்டர் பயணிக்க அமெரிக்க சுற்றுலா பயணியிடம் ரூ. 18 ஆயிரம் வசூலித்த டாக்சி டிரைவர் கைது

கணவர் 'குரங்கு’ என்று அழைத்ததால் மாடல் அழகி தூக்கிட்டு தற்கொலை

அஜித்பவாரின் மனைவி சுனேத்ரா துணை முதல்-மந்திரி ஆகிறார்?

மத்தியபிரதேசம்: கார் மீது லாரி மோதி கோர விபத்து - 4 பேர் பலி

சத்தீஸ்கரில் 4 நக்சலைட்டுகள் போலீசில் சரண்