புதுடெல்லி,
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான நாகாலாந்தில் நாகா மக்கள் முன்னணி மற்றும் பா.ஜனதா தலைமையிலான கூட்டணி ஆட்சி நடக்கிறது.
அங்கு தனி நாடு கோரி நாகாலாந்து தேசிய சோஷலிச கவுன்சில் என்கிற அமைப்பு அரை நூற்றாண்டுக்கும் மேலாக ஆயுதம் ஏந்தி போராடி வருகிறது.
ஆயுதம் ஏந்திய போராளிகளுக்கும், ராணுவ வீரர்களுக்குமான மோதலில் பலர் கொன்று குவிக்கப்பட்டு உள்ளனர்.
இதற்கு தீர்வுகாணும் விதமாக கடந்த 2015-ம் ஆண்டு நாகாலாந்து பயங்கரவாத அமைப்புகளுடன், மத்திய அரசு ஓர் அமைதி ஒப்பந்தத்தை மேற்கொண்டது.
ஆனால் இந்த ஒப்பந்தமானது பிரச்சினைக்கான தற்காலிக தீர்வாக அமைந்ததே தவிர நிரந்தரமானதாக இல்லை.
இந்த நிலையில் நாகாலாந்து சட்டசபைக்கான தேர்தல் அண்மையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி அடுத்த மாதம் 27-ந்தேதி அங்கு வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த அறிவிப்பை தொடர்ந்து, நேற்று முன்தினம் தலைநகர் கோஹிமாவில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.
இதில் ஆளும் நாகா மக்கள் முன்னணி, பா.ஜ.க., காங்கிரஸ், ஆம்ஆத்மி, ஜனநாயக முன்னணி, ஐக்கிய ஜனதாதளம் உள்பட அனைத்து கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில், நாகாலாந்து பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் வரை தேர்தலை புறக்கணிப்பதாக அனைத்து கட்சிகளும் ஒரு மனதாக முடிவெடுத்தன.
இதனால் நாகாலாந்தில் திட்டமிட்டபடி சட்டசபை தேர்தல் நடைபெறுமா என்கிற சந்தேகம் எழுந்து உள்ளது.
இந்த நிலையில் நாகாலாந்து விவகாரம் குறித்து, உள்துறை ராஜாங்க மந்திரியும், நாகாலாந்து மாநில பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளருமான கிரண்ரிஜிஜூ தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்து உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
உரிய நேரத்தில் தேர்தலை நடத்துவது அரசியலமைப்பின் செயல்முறையாகும். மத்திய அரசு அரசியலமைப்பால் பிணைக்கப்பட்டதாகும்.
நாகாலாந்து மக்களின் உணர்வுகளை மத்திய அரசு முழுமையாக புரிந்துகொண்டு உள்ளது. தேர்தலை புறக்கணிப்பது என்பது பிரச்சினைக்கு தீர்வாக அமையாது.
நமது பிரதமர் நரேந்திர மோடியின் நிலைப்பாடு மீது நம்பிக்கை வைப்போம். நாகாலாந்தின் நீண்ட கால பிரச்சினைக்கு தீர்வுகான மத்திய அரசு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகிறது.
நாகாலாந்தில் நடக்க இருக்கும் தேர்தல் தொடர்ந்துகொண்டிருக்கும் அமைதி பேச்சுவார்த்தையை எளிதாக்குவதோடு, நமது நிலைப்பாட்டிற்கு மேலும் பலம் சேர்க்கும் என நம்புகிறோம்.
இதற்கிடையே, தேர்தலுக்கு முன்பாக பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்ற மக்களின் விருப்பத்திற்கு ஆதரவு அளித்து ஆளும் நாகா மக்கள் முன்னணி கட்சியை சேர்ந்த 10 எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.
அவர்கள் தங்களுடைய ராஜினாமா கடிதங்களை சபாநாயகர் இம்டிவாபாங் ஐயரிடம் வழங்கினர். அவற்றை ஏற்றுக்கொண்ட அவர் ராஜினாமா செய்த எம்.எல்.ஏ.க்களின் தொகுதிகள் காலியானவை என அறிவித்தார்.
இந்த நிலையில் திடீர் திருப்பமாக கூட்டணி கட்சியான பா.ஜ.க. தேர்தலை புறக்கணிக்கும் முடிவில் இருந்து பின்வாங்கி உள்ளது.
இந்த விவகாரம் குறித்து கட்சியின் தலைமை முடிவெடுக்கும் என மாநில பா.ஜ.க. தெரிவித்து உள்ளது.
மேலும் தேர்தலை புறக்கணிப்பது தொடர்பான அனைத்து கட்சியின் கூட்டறிக்கையில் கையெழுத்திட்ட மாநில பா.ஜ.க. நிர்வாக குழு உறுப்பினர் கேடோ செமபார்டி இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.