தேசிய செய்திகள்

மக்களவையில் பட்ஜெட் விவாதத்துக்கு பதில்: ராகுல் காந்தி மீது நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு “நாட்டை இழிவுபடுத்துகிறார், முக்கிய பதவியில் உள்ளவர்களை அவமதிக்கிறார்”

மக்களவையில் பட்ஜெட் மீதான விவாதத்துக்கு நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் பதில் அளித்தபோது, “ராகுல் காந்தி நாட்டை இழிவுபடுத்துகிறார், அரசியலமைப்பின்படி முக்கிய பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை அவமதிக்கிறார்” என்று குற்றம் சுமத்தினார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

பிரதமர் நரேந்திர மோடியையும், மத்திய பா.ஜ.க கூட்டணி அரசையும் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி சரமாரி சாடி வருகிறார். குறிப்பாக அவர் மோடி அரசு முதலாளித்துவத்தை ஊக்குவித்து வருகிறது. இந்த நாடு 4 பேரால் ஆட்சி செய்யப்படுகிறது என கூறும் குற்றச்சாட்டு மத்தியில் ஆளும் பா.ஜ.க. தலைவர்கள் மத்தியில் எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது.

நாடாளுமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதத்துக்கு நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று பதில் அளித்த போது, ராகுல் காந்திக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் பதில் அளிக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்டார். அப்போது சபையில் பிரதமர் நரேந்திர மோடி, ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் இருந்தனர். அவர் கூறியதாவது:-

காங்கிரஸ் கட்சி போலி கதைகளை உருவாக்குவதிலும், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்துவதிலும் ஈடுபட்டிருக்கிறது.

ராகுல் காந்தி என்ன வகையில் செயல்பட விரும்புகிறார்? சபாநாயகர் அல்லது முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் என அரசியல் அமைப்பின்படி முக்கிய பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை தொடர்ந்து அவமதித்து வருகிறார்.

இந்தியாவை இழிவுபடுத்துகிறார். அரசமைப்புகளை அவமதிக்கிறார். இந்தியாவை பிளவுபடுத்தும் குழுக்களுடன் சேர்கிறார்.

நாங்கள் நிலங்களை மருமகன்களுக்கு கொடுத்து விடவில்லை. பிரதம மந்திரியின் தெருவியாபாரிகள் சுய சார்பு நிதியை கூட்டாளிகளுக்கு கொடுக்கவில்லை. ராஜஸ்தான், அரியானா மாநிலங்களில் ஒரு காலத்தில் அந்தக் கட்சி ஆட்சி செய்தபோது நிலங்கள் மருமகனுக்கு வழங்கப்பட்டன. எங்கள் கூட்டாளிகள், பிரதமர் மோடி மீது நம்பிக்கை வைத்துள்ள சாமானிய மக்கள்தான்.

(சோனியாவின் மருமகன் ராபர்ட் வதேராவுக்கு காங்கிரஸ் ஆட்சி செய்த மாநிலங்களில் நிலங்கள் சட்டத்துக்கு புறம்பாக ஒதுக்கீடு செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது நினைவுகூரத்தக்கது.)

பிரதமர் மோடி தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர், ஏழை மக்களுக்காக உழைக்கிறார். மக்கள் அவரை நம்புகிறார்கள்.

இந்த பட்ஜெட், பிரதமர் மோடி குஜராத் முதல்-மந்திரியாக இருந்தபோது பெற்ற அனுபவத்தை கொண்டு போடப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் போன்ற சவாலான சூழல், நாட்டின் நீண்டகால வளர்ச்சிக்கு தேவையான சீர்திருத்தங்களை அரசு செய்வதை தடுக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

சிறுபான்மையினர் ஒதுக்கீடு அதிகரிப்பு நிர்மலா சீதாராமன் பட்ஜெட் பதில் உரையில் வெளியான முக்கிய தகவல்கள்:-

* சிறுபான்மையினர், எஸ்,.சி., எஸ்.டி., இனத்தவருக்கான ஒதுக்கீடு குறைக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு பட்ஜெட் விவரங்களை குறிப்பிட்டு நிர்மலா சீதாராமன் பதில் அளித்தார். இந்த பிரிவினர்களுக்கான ஒதுக்கீடு குறைக்கப்படவில்லை என்று கூறிய அவர் சிறுபான்மையினருக்கு ரூ.4,811 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இது உண்மையான செலவினத்தை விட 8.6 சதவீதம் கூடுதல் எனவும் குறிப்பிட்டார்.

* எஸ்.சி. இனத்தவருக்கு கடந்த ஆண்டு பட்ஜெட்டில் ரூ.83 ஆயிரத்து 257 கோடி ஒதுக்கப்பட்டதாகவும், அடுத்த ஆண்டு பட்ஜெட்டில் ரூ.1 லட்சத்து 26 ஆயிரத்து 259 கோடி ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

* எஸ்.டி. இனத்தவருக்கான ஒதுக்கீடும் ரூ.53 ஆயிரத்து 653 கோடியில் இருந்து ரூ.79 ஆயிரத்து 942 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

கிராமப்புற வேலை வாய்ப்பு திட்டம்

* மகாத்மா காந்தி கிராமப்புற வேலை வாய்ப்பு திட்டத்துக்காக ரூ.73 ஆயிரம் கோடி பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தேவை ஏற்பட்டால் இன்னும் கூடுதலான நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

* ராணுவத்துக்கான ஒதுக்கீடு வருவாய், மூலதனம், ஓய்வூதியம் என்ற 3 தலைப்புகளில் அதிகரிக்கப்பட்டுள்ளது. வருவாய் வகையில் ரூ.2 லட்சத்து 9 ஆயிரத்து 319 கோடியும், மூலதன வகையில் ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்து 734 கோடியும், ஓய்வூதியம் வகையில் ரூ.1 லட்சத்து 33 ஆயிரத்து 825 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மத்திய நிதி மந்திரி குறிப்பிட்டார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து