கார்வார்;
லாரி-வேன் மோதல்
உத்தர கன்னடா கார்வார் மாவட்டம் எல்லாப்புரா டவுன் பகுதியை சேர்ந்தவர் மஞ்சுநாதா (வயது 42). இவர், அதேப்பகுதியில் சொந்தமாக ஓட்டல் நடத்தி வருகிறார். இவரது மனைவி சஹானா. இந்த தம்பதிக்கு சாக்சி, பிரகாஸ் என்ற 2 பிள்ளைகள் உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று காலையில் மஞ்சுநாதா, தனது குடும்பத்துடன் மடங்கேரியில் உள்ள உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேனில் சென்றார்.
அவருடன் உறவினர் ஒருவரும் சென்றுள்ளார். வேனை மஞ்சுநாதா ஓட்டியதாக கூறப்படுகிறது. எல்லாப்புரா ஹொன்னள்ளி அருகே சென்றபோது மங்களூருவில் இருந்து ஜமகண்டி நோக்கி வந்த லாரியும், இவர்கள் சென்ற வேனும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் வேனின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது.
பெண் பலி
இதன் இடிபாடுகளில் சிக்கி தலையில் பலத்த காயம் அடைந்த சஹானா சம்பவ இடத்திலேயே பலியானார். மற்ற 4 பேரும் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினர். இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர், அவர்களை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுபற்றி தகவல் அறிந்த எல்லாப்புரா போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் பலியான சஹானாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து எல்லாப்புரா போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.