தேசிய செய்திகள்

சுதந்திர தின உரை: பாரதியார் கவிதையை மேற்கோள் காட்டிய மோடி

சுதந்திர தின உரையில் மோடி, பாரதியார் கவிதையை மேற்கோள் காட்டி, தமிழில் வாசித்து இந்தியில் மொழி பெயர்த்தார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

டெல்லியில் நேற்று நடந்த சுதந்திர தினவிழாவில் பிரதமர் மோடி சிறப்புரையாற்றினார். அப்போது அவர் தனது தலைமையிலான மத்திய அரசு மேற்கொண்டு வரும் திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப்பணிகள் குறித்து எடுத்துரைத்தார்.

மேலும் உலக அரங்கில் இந்தியாவின் நிலை உயர்ந்து வருவதையும் அவர் மகிழ்ச்சி பொங்க கூறினார். உலக நாடுகளுக்கு முன்மாதிரியாக இந்தியா விளங்குவதாக குறிப்பிட்ட அவர், இதற்காக பாரதியார் எழுதிய கவிதை ஒன்றை மேற்கோள் காட்டினார்.

அவர் கூறுகையில், இந்தியாவுக்கான ஒரு பார்வையை சுதந்திரத்துக்கு பல ஆண்டுகளுக்கு முன்பே பாரதி கனவு கண்டார். அனைத்து விதமான அடிமைத்தனத்தில் இருந்தும் விடுபடுவதற்கான வழியை இந்தியா உலகிற்கு காட்டும் என அவர் கூறி இருக்கிறார் என்று தெரிவித்தார்.

பாரதியின் அந்த கவிதையை தமிழிலேயே வாசித்த பிரதமர் மோடி, பின்னர் அதை இந்தியில் மொழிபெயர்த்தும் கூறினார். பாரத சமுதாயம் என்ற தலைப்பில் எழுதப்பட்ட அந்த கவிதை வரிகள் வருமாறு:-

எல்லா உயிர்களிலும் நானே யிருக்கிறேன்

என்றுரைத்தான் கண்ண பெருமான்;

எல்லாரும் அமரநிலை எய்தும்நன் முறையை

இந்தியா உலகிற் களிக்கும் - ஆம்

இந்தியா உலகிற் களிக்கும் - ஆம் ஆம்;

இந்தியா உலகிற் களிக்கும்.

பாரதியின் இந்த வரிகள், அனைத்து மக்களையும், குறிப்பாக இளைய தலைமுறையினரை சென்றடையும் நோக்கில், இந்த கவிதையை தனது டுவிட்டர் பக்கத்திலும் பிரதமர் மோடி பின்னர் வெளியிட்டு இருந்தார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்