புதுடெல்லி,
இந்தியாவின் திரிபுரா மாநிலம் சப்ரூம் பகுதியையும், வங்காளதேசத்தின் ராம்கார் பகுதியையும் இணைக்கும்வகையில் புதிய பாலம் கட்டப்பட்டுள்ளது. பேணி ஆற்றின் குறுக்கே கட்டுப்பட்டுள்ள இப்பாலத்துக்கு மைத்ரி சேது என்று பெயரிடப்பட்டுள்ளது. இதன் நீளம் 1.9 கி.மீ. ஆகும்.
இந்த பாலத்தின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. பிரதமர் மோடி காணொலி காட்சி மூலமாக திறந்து வைத்தார்.
திரிபுராவில் நடந்து வரும் பா.ஜனதா ஆட்சிக்கு நேற்று 3-வது ஆண்டு விழா ஆகும். ஆகவே, அங்கு பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு மோடி அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில், பிரதமர் மோடி பேசியதாவது.
திரிபுராவில் 30 ஆண்டுகளாக இடதுசாரி அரசு நடந்தது. வேலைநிறுத்த கலாசாரத்தால் இந்த மாநிலம் பின்னுக்கு தள்ளப்பட்டது.
இப்போது, இரட்டை என்ஜின் கொண்ட அரசு அமைந்ததால், மாற்றம் நிகழ்ந்து வருகிறது. தொழில் செய்ய உகந்த மாநிலமாக ஆகி வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில், வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனாவின் வீடியோ உரை ஒளிபரப்பப்பட்டது. அதில் அவர் பேசி இருப்பதாவது:-
மைத்ரி சேது பாலம் திறக்கப்பட்டது, வரலாற்று சிறப்புமிக்க தருணம். இந்தியாவுடன் இணைப்பு உருவானதன் மூலம் தெற்கு ஆசியாவில் புதிய சகாப்தத்தை உருவாக்கி இருக்கிறோம். அரசியல் எல்லைகள், வர்த்தகத்துக்கு தடைக்கற்களாக மாறிவிடக்கூடாது.
இந்த பாலம், வங்காளதேசத்தில் உள்ள சிட்டகாங் துறைமுகத்துக்கு செல்ல உதவியாக இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.