புதுடெல்லி,
ஈராக் தலைநகர் பாக்தாதில் உள்ள பிரதமர் முஸ்தபா அல்-காதிமியின் வீட்டின் மீது ஆளில்லா விமானம் மூலம் நேற்று வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் முஸ்தபா அல்-காதிமி அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்தார்.
இந்நிலையில், ஈராக் பிரதமர் முஸ்தபா அல்-காதிமி மீதான தாக்குதலுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி நேற்று கூறுகையில், ஈராக் பிரதமர் முஸ்தபா அல்-காதிமி வீட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு நாங்கள் கடும் கண்டனம் தெரிவிக்கிறோம். நாகரிக சமுதாயத்தில் பயங்கரவாதத்துக்கும், வன்முறைக்கும் இடமில்லை. அவை, ஈராக்கின் அமைதி, நிலைத்தன்மையை பாதிக்க அனுமதிக்கக் கூடாது. இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நாங்கள் எங்கள் கவலையை தெரிவிக்கிறோம். அதேநேரம், ஈராக் ஜனநாயக செயல்பாட்டு நடைமுறைகளுக்கான எங்கள் ஆதரவை உறுதிப்படுத்துகிறோம் என்று அவர் தெரிவித்தார்.