புதுடெல்லி,
கொரோனா பரவல் காரணமாக பல மாதங்களாக சர்வதேச விமான போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து படிப்படியாக உள்நாட்டு விமானங்கள் இயக்கப்பட்டன. அதை தொடர்ந்து சர்வதேச பயணிகளுக்காக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், சர்வதேச விமானங்களுக்கான தடை மே 31 -ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, அதிகாரிகளால் ஒப்புதல் வழங்கப்பட்டு இயக்கப்படும் சர்வதேச விமானங்களுக்கு இது பொருந்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரித்து வரும் சூழலில், சிவில் விமான போக்குவரத்து அமைச்சகமும் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எனினும் சரக்கு விமானங்களுக்கு இத்தகைய கட்டுப்பாடுகள் பொருந்தாது எனவும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.