புதுடெல்லி,
கொரோனா தொற்றின் 2-வது அலை இந்தியாவில் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியது. தினசரி பாதிப்பு பல நாட்கள் 4 லட்சத்தை தாண்டியது. தற்போது ஊரடங்கு, பொதுமுடக்கம், கட்டுப்பாடுகளால் 2-வது அலை தொடர்ந்து குறைந்து வருகிறது.
நேற்று தினசரி தொற்று பாதிப்பு எண்ணிக்கை 50,040 ஆக உயர்ந்திருந்தது. நேற்று முன்தினத்துடன் ஒப்பிடுகையில் நேற்று கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்பு சற்றே அதிகரித்தது. நேற்று முன்தினம் 1,183 பேர் பலியாகி இருந்தனர். நேற்று இந்த எண்ணிக்கை அதிகரித்து 1,258 ஆக பதிவாகி உள்ளது.
இந்நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதக 46 ஆயிரத்து 148 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது.. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,02,79,331 ஆக அதிகரித்துள்ளது.
அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 979 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 3,96,730 ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஏப்ரல் 12ஆம் தேதிக்கு பிறகு முதல் முறையாக தினசரி இறப்பு எண்ணிக்கை 1,000 க்கும் கீழ் குறைந்துள்ளது. 100 க்கும் மேற்பட்ட இறப்புகளைப் பதிவு செய்த ஒரே மாநிலமான மராட்டிய மாநிலத்தில் 411 இறப்புகள் பதிவாகி உள்ளன.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 58,578 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,93,09,607 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா தொற்றுக்கு தற்போது 5,72,994 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் இதுவரை 32,36,63,297 பேருக்கு (நேற்று மட்டும் 17,21,268 பேர்) கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய சுகாதார அமைச்சகம் இன்று வெளியிட்ட இந்த புள்ளி விவரங்கள், இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலை தொடர்ந்து வீழ்ச்சிப்பாதையில் சென்று கொண்டிருப்பதை காட்டுகிறது.