புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு சில நாட்களுக்கு முன்பு அதிகரித்தபோதிலும், மீண்டும் சரிவடைந்து வருகிறது. கடந்த சனிக்கிழமை 14 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு இருந்தனர். நேற்று முன்தினம் 12 ஆயிரத்து 830 பேர் பாதிக்கப்பட்டனர். நேற்று கொரோனா பாதிப்பு 12 ஆயிரத்து 514 - ஆக இருந்தது. இந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் பதிவான தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 10,423- ஆக சரிந்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 10,423 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து மேலும் 15,021- பேர் குணம் அடைந்தனர். தொற்று பாதிப்புக்கு ஒரே நாளில் 443- பேர் உயிரிழந்துள்ளனர்.
நாட்டில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 42 லட்சத்து 96 ஆயிரத்து 237- ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 53 ஆயிரத்து 776- ஆக உள்ளது. கடந்த 250 நாட்களில் இதுதான் குறைந்தபட்ச எண்ணிக்கையாகும்.
கொரோனா தொற்றில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 36 லட்சத்து 83 ஆயிரத்து 581- ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்து 58 ஆயிரத்து 880- ஆக உயர்ந்துள்ளது. தினசரி தொற்று பாதிப்பு விகிதம் 1.03 சதவிகிதமாக உள்ளது