தேசிய செய்திகள்

ரஷியாவிடம் இருந்து 5 எஸ்-400 வான் பாதுகாப்பு சாதனங்களை வாங்கும் இந்தியா

பாகிஸ்தானின் 5 முதல் 6 போர் விமானங்களை இந்த வான் பாதுகாப்பு சாதனங்கள் வீழ்த்தின.

புதுடெல்லி

ரஷியாவிடம் இருந்து 5 எஸ்-400 சுதர்சன ரக வான் பாதுகாப்பு சாதனங்களை வாங்க இந்தியா முடிவு செய்துள்ளது. பாகிஸ்தானுக்கு எதிராக கடந்த ஆண்டு நடந்த ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கையின்போது இந்த சாதனங்கள் இந்தியாவுக்கு வலுவாக கைகொடுத்தன.

அப்போது பாகிஸ்தானின் 5 முதல் 6 போர் விமானங்களை இந்த வான் பாதுகாப்பு சாதனங்கள் வீழ்த்தின. தவிரவும், அந்நாட்டின் உளவு விமானம் ஒன்றை 300 கி.மீ. தொலைவில் அந்நாட்டிற்குள்ளேயே வைத்து வீழ்த்தியது. இதனால், இந்திய விமான படை திறமையாக செயல்பட, அது பெரிய அளவில் உதவியது.

இதனை தொடர்ந்து, இந்த வகை ஆயுதங்களை அதிக அளவில் வாங்க இந்திய விமான படை ஆர்வம் காட்டியுள்ளது. இதனால், வான் பாதுகாப்பு திறன்கள் இன்னும் வலுப்படும். இதற்காக ரஷிய தரப்பிடம் ஆலோசனையை இந்தியா முன்பே நடத்தி விட்டது. இதற்கான டெண்டர் அறிவிப்பும் விரைவில் வெளியிடப்படும் என பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த வகை ஆயுதங்களை வாங்குவதற்காக கடந்த 2018-ம் ஆண்டு ரஷியாவுடன் ஒரு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. அப்போது 5 எஸ்-400 ரக வான் பாதுகாப்பு சாதனங்களை வாங்க முடிவானது.

அதன்படி இதுவரை 3 எஸ்-400 ரக வான் பாதுகாப்பு சாதனங்களை இந்தியா வாங்கியுள்ளது. அவை செயல்பாட்டிலும் உள்ளன. மீதமுள்ள 2 சாதனங்களை வழங்கும்படி ரஷியாவிடம் இந்தியா கேட்டுள்ளது. இதன் திறமையான செயல்பாடு, துல்லிய தாக்குதல் போன்றவற்றால், இதுபோக கூடுதலாக 5 எஸ்-400 சுதர்சன ரக வான் பாதுகாப்பு சாதனங்களை வாங்க இந்தியா திட்டமிட்டு உள்ளது.

SCROLL FOR NEXT