தேசிய செய்திகள்

விவசாயிகளின் நலனில் இந்திய-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் சமரசம் செய்யாது: பிரதமர் மோடி

இந்திய-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தினால் நாட்டில், சமூகத்தில் உள்ள ஒவ்வொரு பிரிவினரும் பலனடைவர் என பிரதமர் மோடி கூறினார்.

புதுடெல்லி,

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப், பதவியேற்ற பின்னர் சீனா, கனடா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கும் கடந்த ஆண்டில் கூடுதல் வரிகளை விதித்து உத்தரவிட்டார்.

இந்நிலையில், உக்ரைன் போரை தடுத்து நிறுத்தும் நோக்கில், ரஷியாவுக்கு பைடன் அரசின்போது அமெரிக்கா தடைகளை விதித்து வந்தது. டிரம்ப் பதவியேற்ற பின்னர் இந்தியாவுக்கான வரி விதிப்பு அதிகரித்தது. இந்திய பொருட்களுக்கு 10 சதவீதம் என இருந்த வரியை முதலில் 25 சதவீதம் என்றும் பின்னர் 50 சதவீதம் என்றும் உயர்த்தினார்.

இதனால், இந்திய ஏற்றுமதி சந்தை கடுமையான பாதிப்பை சந்தித்தது. ரஷிய எண்ணெய்யை இந்தியா வாங்குகிறது என்றும், அதனால், போர் தளவாடங்கள் வாங்க அந்த நிதியை ரஷியா பயன்படுத்தி கொள்கிறது என குற்றம் சாட்டியும் இந்தியாவுக்கான வரியை அமெரிக்கா அதிகரித்தது.

இந்நிலையில், அமெரிக்கா மற்றும் இந்தியா இடையே வரி குறைப்புக்கான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்தது. அதில், வரியை குறைப்பது தொடர்பான அறிவிப்பும் இருக்கும் என கூறப்பட்டது.

இந்த சூழலில், பிரதமர் மோடியை அமெரிக்க அதிபர் டிரம்ப் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு 2-ந்தேதி இரவு பேசினார். இதன்படி, இந்தியா-அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் ஒன்று இறுதி செய்யப்பட்டு உள்ளது என டிரம்ப் அறிவித்து உள்ளார். இதன் தொடர்ச்சியாக, இந்தியாவுக்கான இறக்குமதி வரி 25 சதவீதத்தில் இருந்து 18 சதவீதம் ஆக குறைக்கப்பட்டு உள்ளது என்றும் டிரம்ப் தெரிவித்து உள்ளார்.

இந்த இந்திய-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் கடுமையான குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றன. அமெரிக்காவுக்கு இந்தியா அடிபணிந்து விட்டது என கூறின.

இந்நிலையில், நாடாளுமன்றத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்களுடன் பிரதமர் மோடி கூட்டம் ஒன்றை நடத்தினார். அப்போது அவர், மத்திய பட்ஜெட்டின் பலன்களை, சாதனைகளை மக்களிடையே எடுத்து கூறுங்கள். விவாதங்களின்போது அவையில் கலந்து கொள்ளுங்கள் என கூறினார்.

தொடர்ந்து அவர், இந்த இந்திய-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என்பது ஒரு பெரிய முடிவு. நாட்டில், சமூகத்தில் உள்ள ஒவ்வொரு பிரிவினரும் இதனால் பலனடைவர். இந்த ஒப்பந்தம் விவசாயிகளின் நலனில் சமரசம் செய்யாது. இந்திய விவசாயிகளை எந்த வகையிலும் அது பாதிக்காது என கூறினார். இந்தியாவின் நலன்கள் வருங்காலத்திலும் தொடர்ந்து பாதுகாக்கப்படும் என்று கூறினார்.

டெல்லி: ஹோலி, தீபாவளியில் மக்களுக்கு இலவச கியாஸ் சிலிண்டர்கள் அறிவிப்பு

16 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் சமூக ஊடகம் பயன்படுத்த தடை; ஸ்பெயின் திட்டம்

இந்தியாவில் 2025-ல் 19 விமான விபத்துகள்: மத்திய அரசு தகவல்

மியான்மரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; வங்காளதேசம், கொல்கத்தாவிலும் உணரப்பட்டது

சவுதி அரேபியா சென்ற அஜித் தோவலுக்கு சிறப்பான முறையில் வரவேற்பு