தேசிய செய்திகள்

‘இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் அடுத்த மாதம் கையெழுத்தாக வாய்ப்பு’ - பியூஷ் கோயல் தகவல்

ஒப்பந்தத்தில் முதலீட்டு உறுதிமொழி எதுவும் இல்லை என மத்திய மந்திரி பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப், பதவியேற்ற பின்னர் சீனா, கனடா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கும் கடந்த ஆண்டில் கூடுதல் வரிகளை விதித்து உத்தரவிட்டார். இந்திய பொருட்களுக்கு 10 சதவீதம் என இருந்த வரியை முதலில் 25 சதவீதம் என்றும், பின்னர் 50 சதவீதம் என்றும் உயர்த்தினார்.

இதனால், இந்திய ஏற்றுமதி சந்தை கடுமையான பாதிப்பை சந்தித்தது. ரஷிய எண்ணெய்யை இந்தியா வாங்குகிறது என்றும், அதனால், போர் தளவாடங்கள் வாங்க அந்த நிதியை ரஷியா பயன்படுத்திக் கொள்கிறது எனவும் குற்றம்சாட்டி இந்தியாவுக்கான வரியை அமெரிக்கா அதிகரித்தது.

இதற்கிடையில் அமெரிக்கா-இந்தியா இடையே வரி குறைப்புக்கான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடந்து வந்தன. இந்த சூழலில், கடந்த 2-ந்தேதி பிரதமர் மோடியை அமெரிக்க அதிபர் டிரம்ப் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேசினார்.

தொடர்ந்து, இந்தியா-அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது என டிரம்ப் அறிவித்தார். அதன்படி, இந்தியாவுக்கான இறக்குமதி வரி 25 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது என டிரம்ப் தெரிவித்தார்.

இந்த நிலையில் இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் அடுத்த மாதம் கையெழுத்தாக வாய்ப்புள்ளதாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை மந்திரி பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது;-

“இந்தியா-அமெரிக்கா இடையிலான இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தின் முதல் பகுதி குறித்த கூட்டு அறிக்கையில் அடுத்த 4 அல்லது 5 நாட்களுக்குள் இரு நாடுகளும் கையெழுத்திடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு அமெரிக்கா விதித்த வரிகள் 18 சதவீதமாகக் குறையும். அதனை தொடர்ந்து ஒப்பந்தத்தின் முதல் பகுதி தொடங்கும்.

ஒப்பந்தத்தின் முறையான வரைவு செய்யப்பட்டு வருகிறது. அந்த பணிகள் முழுமையடைய ஒரு மாதம் அல்லது ஒன்றரை மாதங்கள் ஆகலாம். மார்ச் மாதத்தில் முறையான ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்புள்ளது. இந்த ஒப்பந்தத்தில் முதலீட்டு உறுதிமொழி எதுவும் இல்லை.”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.