தலைவணங்க வேண்டிய நிலை
மும்பையில் உள்ள பள்ளியில் நடந்த 75-வது சுதந்திர தினவிழாவில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்டார்.
பின்னர் விழாவில் அவர் பேசியதாவது:-
நாம் இணையதளத்தையும், தொழில்நுட்பத்தையும் அதிகம் பயன்படுத்துகிறோம். ஆனால் நமது நாட்டிடம் அசல் தொழில்நுட்பம் கிடையாது. அது வெளியில் இருந்து தான் கிடைக்கிறது. ஒரு சமூகமாக நாம் சீனாவுக்கு எதிராக எவ்வளவு குரல் கொடுத்தாலும், சீன பொருட்களை புறக்கணித்தாலும் ஒன்றுமில்லை. ஆனால் உங்கள் செல்போனில் உள்ள ஒவ்வொன்றும் எங்கிருந்து வருகிறது?. சீனாவை சார்ந்து இருப்பது அதிகாத்தால், பின்னர் நாம் சீனாவின் முன் தலைவணங்க வேண்டிய நிலை வரும்.
தற்சார்பு நிலை
பொருளாதார பாதுகாப்பு முக்கியமானது. சுதேசி என்றால் மற்ற எல்லாவற்றையும் புறக்கணிப்பது என்று பொருள் அல்ல. நமது விதிகளுக்கு உட்பட்டு சர்வதேச வியாபாரம் இருக்கவேண்டும். அதற்கு நாம் தற்சார்பு உடையவர்களாக மாறவேண்டும். வீட்டில் செய்ய முடிந்ததை நாம் சந்தையில் இருந்து வாங்க கூடாது. நாம் பன்னாட்டு வியாபாரம், வணிகத்திற்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால் நமது உற்பத்தி கிராமங்களில் இருக்க வேண்டும். அது பெரிய அளவில் இருக்க வேண்டாம். ஆனால் அதிக அளவிலான மக்களால் செய்யப்பட வேண்டும். பரவலாக்கப்பட்ட உற்பத்தி இந்திய பொருளாதாரத்திற்கு வேலை வாய்ப்பு, சுயவேலை வாய்ப்பை அதிகரிக்க உதவி செய்யும்.
அதிக உற்பத்தியால், அதிக மக்கள் தற்சார்பு நிலையை அடைவார்கள். தொழிற்சாலைகள் அரசால் ஊக்குவிக்கப்பட வேண்டும். அரசு ஒழுங்குமுறை செய்யும் பணியில் ஈடுபட வேண்டுமே தவிர அவர்களே தொழிலில் ஈடுபட கூடாது. தொழில்துறையை ஊக்குவித்து, ஆதரவு அளிப்பதே அரசின் வேலை. நாட்டின் வளர்ச்சிக்கு எது முக்கியமோ அதை உற்பத்தி செய்ய அரசு வழிகாட்ட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.