டெல்லி,
இந்தியா-சீனா இடையிலான 22-வது சிறப்பு பிரதிநிதிகள் கூட்டம் டெல்லியில் நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய இருதினங்கள் நடைபெறும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு இந்த பிரதிநிதிகள் கூட்டம் சீனாவில் நடைபெற்றது.
நாளை நடைபெறும் கூட்டத்தில் இந்திய தரப்பில் பாதுகாப்புத்துறை ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் சீனா சார்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ ஆகியோர் பிரதிநிதிகளாகப் பங்கேற்பார்கள் என்று தெரிவித்துள்ளது.
கடந்த அக்டோபர் மாதம் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோர் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடத்திய அதிகாரப்பூர்வமற்ற சந்திப்புக்கு பின்னர் இருநாட்டுப் பிரதிநிதிகள் எல்லை விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது.