புதுடெல்லி,
இந்தியா-சீனா எல்லையில் கடந்த ஒரு ஆண்டாக பதற்றமான சூழல் நிலவி வருகிறது. கடந்த 2020 ஜூன் 15ம் தேதி லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில், இந்திய மற்றும் சீன இராணுவத்தினர் இடையே நடந்த மோதலில் 20 இந்திய இராணுவ வீரர்கள் கொல்லப்பட்தாக இந்திய இராணுவம் அதிகாரபூர்வமாக அறிவித்தது.
ஆனால், சீன தரப்பில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தகவல் ஏதும் வெளியாகத நிலையில், கல்வான் மோதலின் போது 5 சீன வீரர்கள் கொல்லப்பட்டதாக அண்மையில் சீன அரசு ஒப்புக்கொண்டது. இந்த மோதலுக்கு பிறகு எல்லையில் இரு நாடுகளும் படைகளை குவிக்க தொடங்கின. இதனால் அங்கு போர் பதற்றம் நிலவி வந்தது.
இதற்கிடையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, இரு நாடுகளும் எல்லையில் இருந்து தங்கள் நாட்டுப் படைகளை விலக்கிக் கொள்வதாக பரஸ்பர ஒப்பந்தம் மேற்கொண்டதன் அடிப்படையில், படிப்படியாக படைகள் திரும்பப் பெறப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ ஆகிய இருவரும் நேற்று தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் 75 நிமிடங்கள் நீடித்த இந்த உரையாடலின் போது இரு தரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடந்ததாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.