தேசிய செய்திகள்

எத்தகைய சவாலையும் எதிர்கொள்ளும் வலிமையுடன் இந்திய படைகள் உள்ளது: அருண் ஜெட்லி

எத்தகைய சவாலையும் எதிர்கொள்ளும் வலிமையுடன் இந்திய படைகள் உள்ளது என்று அருண் ஜெட்லி தெரிவித்தார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

நாட்டின் பாதுகாப்புக்காக எந்த வகையான சவாலையும் எதிர்கொள்ளும் வல்லமையுடன் இந்திய பாதுகாப்பு படைகள் இருப்பதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். தேசப்பிதா மகாத்மா காந்தியால் கடந்த 1942 ஆம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு இயக்கம் துவங்கப்பட்டது. இந்த இயக்கம் துவங்கப்பட்டதன் 75 வது ஆண்டு தினம் இன்று கொண்டாடப்பட்டது.

மாநிலங்களவையில் இது தொடர்பான விவாதத்தை துவக்கி வைத்து பேசிய அருண் ஜெட்லி கூறியதாவது:- இந்த தசாப்தங்களில் இந்தியா பல சவால்களை எதிர்கொண்டுள்ளது. ஆனாலும், ஒவ்வொரு சவாலிலும் இருந்தும் இந்தியா பலம் மிக்கதாக மாறி வருகிறது என்பதை நாம் பெருமையுடன் சொல்லலாம். 1962 ஆம் ஆண்டைய சீன போரில் இருந்து இந்தியா பாடம் கற்று கொண்டிருக்கிறது. ஆயுதப்படை முழு பலம் மிக்கதாக மாறிவருகிறது. ஏனெனில், இப்போதும் கூட இந்தியா தனது அண்டைநாடுகளிடம் இருந்து சவாலை எதிர்கொண்டுள்ளது. 1962 ஆம் ஆண்டை ஒப்பிட்டு பார்க்கும் போது 1965, 1971 போர்களின் போது இந்தியா பலம் மிக்கதாக மாறியது.

சில சவால்கள் தற்போதும் உள்ளது என்பது நான் ஒப்புக்கொள்கிறேன். நமது நாட்டின் இறையாண்மை, ஒருமைப்பாட்டை சிலர் குறிவைத்துள்ளனர். இருப்பினும், நமது நாட்டை பாதுகாக்கும் முழு தகுதியுடன் நமது துணிச்சலான வீரர்கள் உள்ளனர் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. நமது நாட்டின் பாதுகாப்புக்காக ஆயுதப்படையினர் எத்தகைய தியாகத்தையும் செய்வர் என்றார். இந்தியா- சீனா இடையே சிக்கிம் விவகாரத்தால் கடந்த இரு மாதங்களுக்கும் மேலாக பதட்டம் நீடித்து வரும் நிலையில், அருண் ஜெட்லியின் மேற்கண்ட பேச்சு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

சுதந்திரத்திற்கு பிறகு பாகிஸ்தான், ஜம்மு காஷ்மீரில் சில இடங்களை ஆக்கிரமித்தது குறித்தும் பேசிய அருண் ஜெட்லி, சுதந்திரம் பெற்றதும் நாம் சில நெருக்கடியை சந்தித்தோம். நமது அண்டை நாடு காஷ்மீர் மீது ஒரு கண் வைத்துள்ளது. நமது நாட்டின் ஒரு பகுதி பிரிக்கபட்டு இருப்பதை இன்றைக்கு கூட நம்மால் மறக்க முடியவில்லை. அந்த பகுதியை எப்படி மீண்டும் நாம் பெறுவது என்பது ஒவ்வொரு இந்தியனின் விருப்பமாக இன்றைக்கும் உள்ளது என்றார்.

மேலும், இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகிய நமது முன்னாள் பிரதமர்கள் பயங்கரவாதத்தால் தங்கள் உயிரை இழந்ததை குறிப்பிட்டு பேசிய அருண் ஜெட்லி, பயங்கரவாதம் மற்றும் இடது சாரி தீவிரவாதத்தால் நமது நாடு பெரும் சவாலை எதிர்கொண்டுள்ளதாக குறிப்பிட்டார். எல்லைக்கு அப்பாலும் நமது நாட்டிற்குள்ளேயே ஆயுதங்களை ஏந்தியிருப்பவர்களும், பயங்கரவாதத்தை பரப்புவதாகவும் குறிப்பாக வடக்கு பிராந்தியத்தில் பரப்புவதாகவும் குறிப்பிட்டார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை