தேசிய செய்திகள்

இந்திய மாணவர் சுட்டுக்கொலை: தேவையான உதவிகளை செய்வதாக குடும்பத்தினரிடம் சுஷ்மா சுவராஜ் உறுதி

இந்திய மாணவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் தேவையான உதவிகளை செய்வதாக குடும்பத்தினரிடம் சுஷ்மா சுவராஜ் உறுதி அளித்துள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள பெர்ஸ்னோ நகரில் தங்கியிருந்து, அங்கு உள்ள கல்லூரியில் கணக்கியல் படிப்பு படித்து வந்தவர் தரம்பிரீத் சிங் ஜாசர் (வயது 21). இந்தியரான இவருடைய பூர்வீகம் பஞ்சாப் மாநிலம் ஆகும்.இவர் கல்லூரியில் படித்து வந்ததோடு, அதே பகுதியில் உள்ள கியாஸ் நிலையத்துடன் இணைந்த மளிகை கடையில் பகுதி நேரமாக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று இரவு ஜாசர் மளிகை கடையில், பணியில் இருந்தார். அப்போது கொள்ளையர்கள் 4 பேர் அதிரடியாக மளிகை கடைக்குள் நுழைந்தனர். இதனால் பதறிப்போன ஜாசர் தனது உயிருக்கு ஆபத்து வந்துவிடுமோ என்ற பயத்தில் கல்லாப்பெட்டிக்கு கீழே ஒழிந்து கொண்டார்.

கொள்ளையர்கள் கடையில் இருந்த பணம் மற்றும் சில பொருட்களை கொள்ளையடித்தனர். பின்னர் அவர்கள் அங்கு ஒழிந்திருந்த ஜாசரை பார்த்துவிட்டனர். அப்போது கொள்ளையர்களில் ஒருவர் ஜாசரை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். இதில் ஒரு குண்டு ஜாசரின் உடலை துளைத்தது. அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.அதன் பின்னர் அங்கு பொருட்கள் வாங்க வந்த நபர் ஒருவர் கடைக்குள் ஜாசர் குண்டுபாய்ந்து இறந்துகிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக இந்திய வம்சாவளியை சேர்ந்த அத்வால் (22) என்ற நபரை போலீசார் கைது செய்தனர். மளிகை கடையில் கொள்ளையடித்த 4 பேரில் இவரும் ஒருவர் ஆவார். இவர்தான் ஜாசரை சுட்டுக்கொலை செய்திருப்பார் என சந்தேகிக்கப்படுகிறது. எனவே அத்வால் மீது கொலை மற்றும் கொள்ளை குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு உள்ளன. இந்த சம்பவத்தில் தொடர்புடைய மற்ற 3 கொள்ளையர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், இந்திய மாணவர் சுட்டுக்கொல்லப்பட்ட துரதிருஷ்டவசமான சம்பவத்தின் முழு தகவல்களையும் நான் பெற்றேன். இந்த கொலை தொடர்பான வழக்கு விசாரணையை பின் தொடர்ந்து வருகிறோம். மாணவரின் குடும்பத்தினருக்கு தேவையான உதவிகளை செய்து தரப்படும் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது