புதுடெல்லி,
உத்தரபிரதேசத்தின் லகிம்பூர் கேரி மாவட்டத்தில் கடந்த 3-ம் தேதி போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது பாஜகவினர் சென்ற கார் மோதியது. இதில், சில விவசாயிகள் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையில் மொத்தம் 4 விவசாயிகள், ஒரு பத்திரிக்கையாளர் உள்பட 8 பேர் உயிரிழந்தனர்.
விவசாயிகள் மீது மோதிய காரில் மத்திய மந்திரி அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா இருந்ததாக கூறப்படுகிறது. இந்த வன்முறை சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. இந்த வன்முறை தொடர்பாக ஆஷிஷ் மிஸ்ரா மீது கொலைவழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள ஆஷிஷ் மிஸ்ரா விசாரணைக்காக இன்று லகிம்பூரில் உள்ள குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகத்தில் இன்று ஆஜராகியுள்ளார். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், லகிம்பூர் வன்முறையை கண்டித்து காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அமைப்பினர் தலைநகர் டெல்லியில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆஷிஷ் மிஸ்ராவை கைது செய்யக்கோரியும், மத்திய மந்திரி அஜய் மிஸ்ரா பதவி விலகக்கோரியும் காங்கிரஸ் கட்சியின் ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர் காங்கிரசினரை டெல்லி போலீசார் தடுத்து நிறுத்தினர்.
போலீசார் வைத்திருந்த தடுப்புகளை தாண்டி செல்ல காங்கிரஸ் இளைஞர் அணியினர் முயற்சித்தனர். இதனால், போலீசாருக்கும் காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த சம்பவத்தால் தலைநகர் டெல்லியில் பரபரப்பு ஏற்பட்டது.