புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அந்த வகையில் இதுவரை இல்லாத அளவில் புதிதாக சுமார் 16 ஆயிரம் பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டியுள்ளது.
இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவர பட்டியலில், ஒரே நாளில் 15 ஆயிரத்து 968 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், 465 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டில் ஒட்டு மொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 56 ஆயிரத்து 183 ஆகவும், பலியானவர்கள் எண்ணிக்கை 14 ஆயிரத்து 476 ஆகவும் உயர்ந்து இருக்கிறது.
இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 56.71 சதவீதம் பேர், அதாவது 2 லட்சத்து 58 ஆயிரத்து 685 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பிவிட்ட நிலையில், 1 லட்சத்து 83 ஆயிரத்து 22 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இந்தியாவில் 10 மாநிலங்களில் கொரோனா 10 ஆயிரத்துக்கும் அதிகமானோரை பாதிப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது. கொரோனா வைரசின் பிடியில் ஆரம்பம் முதலே சிக்கி தவிக்கும் மராட்டிய மாநிலத்தில் அதிகபட்சமாக 1 லட்சத்து 39 ஆயிரம் பேருக்கு நோய்த்தொற்று உறுதியாகி இருக்கிறது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 67 ஆயிரத்து 468 ஆக உயர்ந்து இருக்கிறது.
தேசிய தலைநகரான டெல்லியில் 66 ஆயிரத்து 602 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். குஜராத்தில் பாதிப்பு 28 ஆயிரத்து 371 ஆக இருக்கிறது. உத்தரபிரதேசத்தில் 18,893, ராஜஸ்தானில் 15,627, மேற்குவங்காளத்தில் 14,728, மத்தியபிரதேசத்தில் 12,261, அரியானாவில் 11,520 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. 10-வது இடத்தில் உள்ள ஆந்திராவில் இந்த எண்ணிக்கை 10,002 ஆக இருக்கிறது. மற்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்துக்கு கீழே உள்ளது.
தமிழகத்தின் அண்டை மாநிலங்களான கர்நாடகாவில் 9,721 பேரும், கேரளாவில் 3,451 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். புதுச்சேரியில் 402 பேர் இந்த நோய்த்தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.
ஒரே நாளில் உயிரிழந்த 465 பேரில், 248 பேர் மராட்டியத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள். டெல்லியில் 68, தமிழகத்தில் 39, குஜராத்தில் 26, உத்தரபிரதேசத்தில் 19, மேற்குவங்காளத்தில் 11, ராஜஸ்தான் மற்றும் அரியானாவில் தலா 9, ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் தலா 8, மத்தியபிரதேசம் மற்றும் பஞ்சாபில் தலா 4, தெலுங்கானாவில் 3, ஜம்மு காஷ்மீர், ஒடிசா மற்றும் உத்தரகாண்டில் தலா 2, புதுச்சேரி, கேரளா மற்றும் பீகாரில் தலா ஒருவரும் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
பலி எண்ணிக்கை
கொரோனா பாதிப்பை போலவே பலி எண்ணிக்கையிலும் மராட்டியமே முதல் இடத்தில் இருக்கிறது. அங்கு 6,531 பேர் இந்த வைரசின் பிடியில் சிக்கி உயிரிழந்துள்ளனர். டெல்லியில் 2,301 பேரும், குஜராத்தில் 1,710 பேரும், தமிழகத்தில் 833 பேரும், உத்தரபிரதேசத்தில் 588 பேரும், மேற்குவங்காளத்தில் 580 பேரும், மத்தியபிரதேசத்தில் 525 பேரும், ராஜஸ்தானில் 365 பேரும், தெலுங்கானாவில் 220 பேரும், அரியானாவில் 178 பேரும், கர்நாடகாவில் 150 பேரும், ஆந்திராவில் 119 பேரும், பஞ்சாபில் 105 பேரும் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் 87 பேரும், பீகாரில் 56 பேரும், உத்தரகாண்டில் 30 பேரும், கேரளாவில் 22 பேரும், ஒடிசாவில் 17 பேரும், சத்தீஸ்காரில் 12 பேரும், அசாம் மற்றும் புதுச்சேரியில் தலா 9 பேரும், இமாசலபிரதேசத்தில் 8 பேரும், சண்டிகாரில் 6 பேரும், திரிபுரா, கோவா, லடாக் மற்றும் மேகாலயாவில் தலா ஒருவரும் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.