தேசிய செய்திகள்

”இந்தியாவின் கிரிக்கெட் திறமை ஜொலிக்கிறது..” பிரதமர் மோடி வாழ்த்து

இளையோர் உலகக்கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

ஜிம்பாப்வேயில் நடைபெற்ற இளையோர் உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்து இந்தியா 6-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. பட்டம் வென்ற இந்திய அணிக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

இந்த நிலையில், வெற்றிக்கோப்பையை உச்சிமுகர்ந்த இந்திய அணிக்கு பிரதமர் மோடியும் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;

"இந்தியாவின் கிரிக்கெட் திறமை ஜொலிக்கிறது! உலகக் கோப்பையை வென்று தாயகம் கொண்டு வந்த நமது 19 வயதுக்குட்பட்டோர் அணி குறித்து நாங்கள் பெருமை கொள்கிறோம். இந்தத் தொடர் முழுவதும் நமது அணி மிகச் சிறப்பாக விளையாடி, அசாதாரண திறமையை வெளிப்படுத்தியுள்ளது. இந்த வெற்றி பல இளம் விளையாட்டு வீரர்களுக்கும் உத்வேகம் அளிக்கும். வீரர்களின் வருங்கால முயற்சிகளுக்கு வாழ்த்துகள்.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.