புதுடெல்லி,
இந்தியப் பெருங்கடல் வழியாக அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான ரொனால்டு ரீகன் விமானம் தாங்கி கப்பல் 2 நாள் பயணத்தை மேற்கொண்டுள்ளது. இந்த இரண்டு நாட்களும் இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாட்டு கடற்படையினருக்கும் இடையில் கூட்டு ராணுவப் பயிற்சி நடைபெறுகிறது.
நேற்று தொடங்கிய இந்த பயிற்சியில், இரு நாட்டு கடற்படைகளுக்கும் சொந்தமான விமானங்கள் பங்கேற்றன. இந்த 2 நாள் கூட்டுப்பயிற்சியின் மூலம் இரு நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உறவுகள் மேம்படும் என்றும் கடல்சார் செயல்பாடுகளில் ஒத்துழைப்பு அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த கூட்டுப்பயிற்சியின் மூலம் இரு நாட்டுப் படைகளும் தங்கள் போர் திறன்களையும், நுணுக்கங்களையும் பகிர்ந்து கொள்ளும் என்றும் கூறப்படுகிறது. இரு நாடுகளுக்கு இடையில் நடைபெறும் இது போன்ற கூட்டுப்பயிற்சிகளின் மூலம் அமைதியை நிலைநாட்டவும், கடல்சார் ஆளுமையில் பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையை உறுதி செய்யவும் உதவும் என அரசின் அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.