புதுடெல்லி,
மூத்த வழக்கறிஞராக இருந்து, உச்ச நீதிமன்ற நீதிபதியாக நேரடியாக நியமனம் செய்யப்பட்ட இந்து மல்கோத்ரா இன்று நீதிபதியாக பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
உச்ச நீதிமன்ற நீதிபதியாக மூத்த வழக்கறிஞர் இந்து மல்கோத்ரா நேற்று நியமனம் செய்யப்பட்டார். கீழ் நீதிமன்றங்களில் நீதிபதியாக பணிபுரியாமல் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பெண் வழக்குரைஞர் ஒருவர் நேரடியாக நியமனம் செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும்.
உத்தரகண்ட் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.எம்.ஜோசப்பை, உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க நீதிபதிகள் தேர்வுக் குழுவான கொலீஜியம் பரிந்துரை செய்தபோது, இந்து மல்கோத்ராவின் பெயரையும் சேர்த்து பரிந்துரை செய்தது. உச்ச நீதிமன்றம் அமைந்து 67 ஆண்டுகளைக் கடந்துள்ள நிலையில், இதுவரை ஆறு பெண்கள் மட்டுமே அங்கு நீதிபதிகளாக வந்துள்ளனர். அவர்கள் அனைவரும் உயர் நீதிமன்ற நீதிபதிகளாகப் பணியாற்றி பின்னர் பதவி உயர்வு பெற்றவர்கள் ஆவர். தற்போது நேரடியாக நியமிக்கப்பட்டிருக்கும் இந்து மல்கோத்ரா, உச்ச நீதிமன்றத்தின் 7-ஆவது பெண் நீதிபதியாவார். இவர் கடந்த 2007-ஆம் ஆண்டு முதல் உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞராக செயல்பட்டு வருகிறார்.
இன்றைய நிலையில், இந்து மல்கோத்ராவை தவிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் பணியாற்றி வரும் பெண் நீதிபதி பானுமதி ஆவார். கடந்த 2014-ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட இவரது பதவிக்காலம் 2020-ஆம் ஆண்டு ஜூலை மாதத்துடன் முடிவுக்கு வருகிறது. இவர் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.