தேசிய செய்திகள்

ராஜீவ் காந்தியின் பெயரில் தகவல் தொழில்நுட்ப விருது - மராட்டிய அரசு அறிவிப்பு

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பெயரில் தகவல் தொழில்நுட்ப விருது வழங்கப்படும் என மராட்டிய அரசு அறிவித்துள்ளது.

தினத்தந்தி

மும்பை,

விளையாட்டு துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான கேல் ரத்னா விருதுக்கு, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பெயர் சூட்டப்பட்டு இருந்தது. இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற ஒலிம்பிக் ஆக்கி போட்டியில் இந்தியாவின் ஆண்கள் மற்றும் பெண்கள் அணி சிறப்பாக செயல்பட்டது.

இதைதொடர்ந்து மத்திய அரசு இந்த விருதுக்கு ராஜீவ் காந்தியின் பெயரை மாற்றிவிட்டு முன்னாள் ஆக்கி ஜாம்பவான் மேஜர் தியான் சந்த்தின் பெயரை சூட்டியது. இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அதேபோல மராட்டியத்தில் ஆளும் சிவசேனா கட்சியும் தனது எதிர்ப்பை பதிவு செய்தது. இதை அரசியல் விளையாட்டு என விமர்சித்தது.

இந்த நிலையில் மராட்டிய அரசு தகவல் தொழில்நுட்ப துறையில் சிறந்து விளங்குபவர்களை பாராட்ட வழங்கப்படும் விருதுக்கு ராஜீவ் காந்தியின் பெயரை சூட்ட முடிவு செய்துள்ளது. அதன்படி 1984-ம் ஆண்டு முதல் 1989-ம் ஆண்டு வரை பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி தகவல் தொழில்நுட்ப துறைக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் செய்த பங்களிப்பை நினைவூட்டுகிற வகையில் இந்த விருது வழங்கப்படும் என மராட்டிய அரசு தெரிவித்துள்ளது.

இந்த விருது ஒவ்வொரு ஆண்டும் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்த நாளான ஆகஸ்ட் 20-ந் தேதி அன்று வழங்கப்பட உள்ளது. இந்த ஆண்டு அக்டோபர் 30-ந் தேதிக்குள் இந்த விருதை பெறுபவர்கள் யார் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மராட்டிய தகவல் மற்றும் தொழில்நுட்ப கழகம் இதற்கான ஏற்பாடுகளை செய்யும் என கூறப்பட்டுள்ளது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு