தேசிய செய்திகள்

இந்தியா முழுவதும் 250 மாவட்டங்களில் இன்று முதல் 4 நாட்களுக்கு உடனடி வங்கி கடன் - மத்திய அரசு நடவடிக்கை

இந்தியா முழுவதும் 250 மாவட்டங்களில் இன்று முதல் 4 நாட்களுக்கு வங்கிகளில் உடனடி கடன் வழங்கப்படுகிறது. பண்டிகை காலத்தையொட்டி மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

புதுடெல்லி,

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பண்டிகை காலங்களில் வங்கிகளில் உடனடி கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஏற்கனவே அறிவித்திருந்தார்.

அதேபோல சில நாட்கள் முன்பு நடைபெற்ற பொதுத்துறை வங்கிகளின் ஆண்டு செயல்பாடு பற்றிய ஆய்வு கூட்டத்தில், அடையாளம் காணப்பட்ட 400 மாவட்டங்களில் கடன் வழங்குவதில் குறிப்பிட்ட இலக்கை அடைவதற்கான நடவடிக்கைகளை எடுப்பது என முடிவு செய்யப்பட்டது. பின்னர் தனியார் வங்கிகளும் இந்த திட்டத்தில் இணைவதற்கு விருப்பம் தெரிவித்தன.

அடுத்த வாரம் சரஸ்வதி பூஜை, விஜயதசமி போன்ற பண்டிகைகள் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி முதல்கட்டமாக நாடு முழுவதும் உள்ள 250 மாவட்டங்களில் இன்று (வியாழக்கிழமை) முதல் 4 நாட்களுக்கு கடன் வழங்க பாரத ஸ்டேட் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, பேங்க் ஆப் பரோடா, கார்ப்பரேஷன் வங்கி உள்பட அனைத்து பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளும் முடிவு செய்துள்ளன.

இதில் சில்லறை வர்த்தகம், விவசாயம், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள், வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான கடன் கல்விக்கடன், தனிநபர் கடன் ஆகியவை உடனடியாக வழங்கப்படுகின்றன.

250 மாவட்டங்களில் பாரத ஸ்டேட் வங்கி 48 மாவட்டங்களில் முன்னோடி வங்கியாக உள்ளது. 17 மாவட்டங்களில் பேங்க் ஆப் பரோடா முன்னோடி வங்கியாக இருக்கிறது.

சிறு, குறு தொழிற்சாலைகள், சிறு வர்த்தகர்கள் முதல் கடைநிலை வாடிக்கையாளர்கள் வரை ஒரே இடத்தில் அனைத்து வங்கி சேவைகளும் வழங்கப்படும் வாடிக்கையாளர்களை தேடி வங்கி சேவை என்ற வழக்கமான வங்கிகளின் சீரமைப்பு நடவடிக்கைகளில் இந்த திட்டமும் ஒரு பகுதி தான்.

இந்த கடன் வழங்கும் திட்டம் பண்டிகை காலங்களில் வர்த்தகர்களுக்கு ஊக்கம் அளிப்பதாகவும் இருக்கும். அதே சமயம் வாடிக்கையாளர்கள் கைகளிலும் பணம் தயாராக இருக்கும். கடன் வழங்குவதில் அனைத்து நிதிதொடர்பான எச்சரிக்கை விதிகளும், விழிப்புணர்ச்சி நடவடிக்கைகளும் வங்கிகளால் பின்பற்றப்படும்.

அந்தந்த மாவட்டங்களில் கடன் வழங்கும் முகாம்கள் பற்றி மக்கள் அறிந்துகொள்ளும் வகையில் விழிப்புணர்வு முயற்சிகள் மேற்கொள்ளப்படும். உள்ளூர் வர்த்தக சங்கங்கள், வணிக நிறுவனங்கள், வர்த்தகசபைகள் மூலமும் வியாபாரிகளுக்கும், நுகர்வோருக்கும் இந்த தகவல் பரப்பப்படும்.

இரண்டாவது கட்டமாக இந்த உடனடி கடன் வழங்கும் திட்டம் தீபாவளி பண்டிகைக்கும் முன்பாக 150 மாவட்டங்களில் வருகிற 21-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை நடத்தப்படும். இவ்வாறு வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு