தேசிய செய்திகள்

டெல்லியில் சர்வதேச தேர்தல் பார்வையாளர்கள் திட்டம் - ஞானேஷ் குமார் தொடங்கி வைத்தார்

பங்கேற்பாளர்கள் தாங்கள் மேற்கொள்ளும் மாநில பயணத்தை மகிழ்ச்சியுடன் அனுபவிக்க ஞானேஷ் குமார் அழைப்பு விடுத்தார்.

புதுடெல்லி,

டெல்லியில் சர்வதேச தேர்தல் பார்வையாளர்கள் திட்டத்தை தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் இன்று தொடங்கி வைத்தார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

“அசாம், கேரளா மற்றும் புதுச்சேரி சட்டப் பேரவைகளுக்கான பொதுத் தேர்தலையொட்டி, சர்வதேச தேர்தல் பார்வையாளர்கள் திட்டத்தை (IEVP), 2026 இந்திய தேர்தல் ஆணையம் இன்று டெல்லியில் தொடங்கியது.

தலைமை தேர்தல் ஆணையர் (CEC) ஞானேஷ் குமார், தேர்தல் ஆணையர்கள் டாக்டர் எஸ்.எஸ்.சாந்து மற்றும் டாக்டர் விவேக் ஜோஷி ஆகியோருடன் இணைந்து, இந்திய சர்வதேச ஜனநாயகம் மற்றும் தேர்தல் மேலாண்மை நிறுவனத்தில் (IIIDEM) இன்று இத்திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தனது தொடக்க உரையில், இந்தியாவில் நடைபெறும் தேர்தல்களை இந்திய தேர்தல் ஆணையம் ஜனநாயக திருவிழாக்களாகவே கருதுவதாகவும், அவற்றை உறுதி செய்வதில் ஒரு 'பணித் திட்ட (Mission) முறையில்' செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும், பங்கேற்பாளர்கள் தாங்கள் மேற்கொள்ளும் மாநில பயணத்தை மகிழ்ச்சியுடன் அனுபவிக்கவும், இந்தியாவின் பன்முகத்தன்மையை நேரில் கண்டு, கற்றுணர்ந்து அனுபவிக்கவும் அவர் அழைப்பு விடுத்தார்.

இத்திட்டத்தின் முதற்கட்டத்தில், பிரதிநிதிகள் 2026 ஏப்ரல் 8-9 தேதிகளில் அசாம், கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களுக்குப் பயணம் மேற்கொள்வார்கள். இரண்டாம் கட்டமாக, பிரதிநிதிகள் 2026 ஏப்ரல் 20 முதல் மேற்கு வங்காளம் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களுக்குச் பயணம் மேற்கொள்வர்கள்.

இத்திட்டத்தின் முதற்கட்டத்தில் 23 நாடுகளைச் சேர்ந்த 43 பிரதிநிதிகள் மற்றும் டெல்லியில் உள்ள ஐந்து வெளிநாட்டு தூதரகங்களின் பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனர். பிரதிநிதிகளுக்கு இன்று IIIDEM-இல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் (EVM) குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. வாக்குப்பதிவு நடைமுறை குறித்து நேரடி அனுபவத்தைப் பெற அவர்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைப் (EVMs) பயன்படுத்தி மாதிரி வாக்கெடுப்பில் பங்கேற்றனர்.

இந்தியாவின் தேர்தல் செயல்பாட்டில் உள்ள தொழில்நுட்பத் தலையீடுகள் மற்றும் நிர்வாகப் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து பிரதிநிதிகள் மிகுந்த ஆர்வம் காட்டினர். வல்லுநர்களுடனான கலந்துரையாடல் அமர்வில் பிரதிநிதிகள் தங்கள் சந்தேகங்கள்/கேள்விகளுக்குத் தெளிவு பெற்றனர்.

பிரதிநிதிகள் 2026 ஏப்ரல் 8 அன்று அசாம், கேரளா மற்றும் யூனியன் பிரதேசமான புதுச்சேரிக்கு பயணம் மேற்கொள்வார்கள். அவர்கள் விநியோக மையங்கள், மாவட்டக் கட்டுப்பாட்டு அறைகள் மற்றும் ஊடகக் கண்காணிப்பு மையங்கள் உள்ளிட்ட பிற வசதிகளைப் பார்வையிடுவார்கள். மேலும், ஏப்ரல் 9, 2026 அன்று காலையில் நடைபெறும் நேரடி வாக்குப் பதிவையும் அவர்கள் பார்வையிடுவார்கள்.

IEVP என்பது சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் பிற நாடுகளின் தேர்தல் மேலாண்மை அமைப்புகளுடன் (EMBs) இணைவதற்கான இந்தியத் தேர்தல் ஆணையத்தின் ஒரு முக்கியத் திட்டமாகும்.

IEVP திட்டம் இந்தியாவின் தேர்தல் கட்டமைப்பு மற்றும் செயல்பாட்டு முறைகள் பற்றிய விரிவான பார்வையை வழங்குவதோடு, தேர்தல் மேலாண்மையில் உள்ள சிறந்த நடைமுறைகள் மற்றும் கண்டுபிடிப்புகளை வெளிநாட்டுப் பிரதிநிதிகளுக்கு அறிமுகப்படுத்துகிறது.

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் தேர்தல்களை நடத்துவதற்குப் பின்பற்றப்படும் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்துகொள்வதன் மூலம், இந்தியாவின் தேர்தல் முறையின் பலத்தை சர்வதேச சமூகத்திற்கு IEVP எடுத்துரைக்கிறது.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.