புதுடெல்லி,
பஞ்சாப் நேஷனல் வங்கியிடம் இருந்தும், அதன் பெயரைப் பயன்படுத்தி வேறு சில வங்கியிடம் இருந்தும் ரூ.11,400 கோடி கடன் பெற்று, அதைத் திருப்பிச் செலுத்தவில்லை என தொழிலதிபர் நீரவ் மோடி மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பான விசாரணை நடவடிக்கையைத் தவிர்க்க அவர் இந்தியாவில் இருந்து தப்பிச் சென்று வெளிநாட்டில் தஞ்சமடைந்துள்ளார்.
மோசடி தொடர்பாக சிபிஐ, அமலாக்கப்பிரிவு மற்றும் வருமான வரித்துறை உள்ளிட்ட விசாரணை முகமைகள் தீவிரமாக விசாரித்து வருகிறது. விசாரணை முகமைகள் சோதனைகள் மற்றும் பறிமுதல் நடவடிக்கையை தொடர்ந்து வருகின்றன. நிரவ் மோடி, மெகுல் சோக்ஷி மற்றும் அவர்களுடைய நிறுவனங்களின் சொத்துக்களையும் விசாரணை முகமைகள் பறிமுதல் செய்து வருகின்றன. நிரவ் மோடியை இந்தியா கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை இந்திய விசாரணை முகமைகள் தீவிரமாக மேற்கொண்டுள்ளன.
சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை நிரவ் மோடியை விசாரணைக்கு ஆஜராகுமாறு தொடர்ந்து சம்மன்கள் அனுப்பி வருகின்றன. அதோடு, நிரவ்மோடியின் பாஸ்போர்ட்டும் இரத்து செய்யப்பட்டுள்ளது. இருந்த போதிலும், போலி பாஸ்போர்ட்கள் மூலமாக நிரவ் மோடி பல நாடுகளுக்கு சென்று வந்ததாக செய்திகள் வெளியாகின. நிரவ்மோடியின் பாஸ்போர்ட் இரத்து செய்யப்பட்ட தகவலை இண்டர்போலிடம் சிபிஐ தெரிவித்தது.
விசாரணை முகமைகளின் தொடர்நடவடிக்கைகளையடுத்து, நிரவ்மோடிக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸை இண்டர்போல் பிறப்பித்துள்ளது. இண்டர்போல் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளதால், இண்டர்போல் உறுப்பு நாடுகளிடம், நிரவ் மோடியின் இருப்பிடத்தை கண்டறியுமாறும் அவர் கண்டறியப்பட்டால் கைது செய்து நாடு கடத்த வேண்டும் என கோரப்படும்.