மும்பை,
ராஜஸ்தான் மாநிலத்தில் 2017-ம் ஆண்டு, பெஹ்லுகான் என்பவர் பசுக்களை வாகனங்களில் ஏற்றிக்கொண்டு, ஜெய்ப்பூரில் இருந்து தனது சொந்த ஊருக்கு சென்று கொண்டிருந்தபோது வழிமறித்து அடித்துக்கொல்லப்பட்டார். இந்த வழக்கில் சிக்கிய 6 பேர் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை என கூறி விடுதலை செய்து ஜெய்ப்பூர் கூடுதல் செசன்ஸ் கோர்ட்டு சமீபத்தில் தீர்ப்பு அளித்தது.
போலீஸ் விசாரணையின் குறைபாடுகளால் ஏற்பட்ட சந்தேகத்தின் பலனை குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு வழங்கி விடுதலை செய்வதாக தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. இது அங்கு அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த தீர்ப்பை எதிர்த்து ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்படும் என அந்த மாநில முதல்-மந்திரி அசோக் கெலாட் அறிவித்துள்ளார்.
இந்த நிலையில், மும்பையில், கலையின் வழியாக விடுதலையை கற்பனை செய்தல் என்ற தலைப்பில் ஒரு கருத்தரங்கு நடந்தது. இந்த கருத்தரங்கில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி தனஞ்சய சந்திரசூட் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் பெஹ்லுகான் வழக்கில் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டது பற்றி கூறினார். அவர், பெஹ்லுகான் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 6 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இப்படிப்பட்ட தீர்ப்புகளை நாம் அடிக்கடி பார்க்கிறோம். இது ஒரு நீதிபதியாக இருப்பதின் மிகப்பெரிய வேதனை. ஏனெனில் சாட்சியங்களின் அடிப்படையில்தான் முடிவு செய்ய வேண்டியதிருக்கிறது என குறிப்பிட்டார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், போலீசாரின் விசாரணை போதுமானதாகவோ அல்லது சரியானதாகவோ இல்லாதபோது குற்றவாளிகள் விடுதலை செய்யப்படுவது நேரிடுகிறது என்றார்.
மேலும், உரிய காலகட்டத்தில் கோர்ட்டை நாடி, விசாரணையை கோர்ட்டு கண்காணிக்க முடிந்த வழக்குகள் சிறந்த முடிவைத் தந்துள்ளன எனவும் கூறினார்.
காஷ்மீரில் கதுவா அருகே உள்ள கிராமத்தில் 8 வயது சிறுமி ஒருத்தி கடத்தி பாலியல் பலாத்காரம் செய்து, கொல்லப்பட்ட வழக்கை நீதிபதி சந்திரசூட் உதாரணமாக சுட்டிக்காட்டினார்.
இந்த வழக்கில் விசாரணை பாதிப்புக்கு ஆளாகாமல் இருக்க சுப்ரீம் கோர்ட்டு பல நடவடிக்கைகளை எடுத்ததாகவும் நீதிபதி சந்திரசூட் குறிப்பிட்டார்.