தேசிய செய்திகள்

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கு: சி.பி.ஐ. கோர்ட்டு விசாரணைக்கு டெல்லி ஐகோர்ட்டு இடைக்கால தடை

சி.பி.ஐ. கோர்ட்டில் நடைபெறும் ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கு விசாரணைக்கு டெல்லி ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்தது.

தினத்தந்தி

சி.பி.ஐ., அமலாக்கத்துறை வழக்கு

கடந்த 2007-ம் ஆண்டில் மத்திய நிதி மந்திரியாக ப.சிதம்பரம் பதவி வகித்தபோது, ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் ரூ.305 கோடி வெளிநாட்டு நிதியைப் பெற்றது. அதற்கு மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் இயங்கும் அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் முறைகேடாக அனுமதி வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதில் ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்துக்கு ப.சிதம்பரத்தின் மகனும், சிவகங்கை தொகுதி எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் உதவியதாகவும் குற்றச்சாட்டு கூறப்பட்டது. இதுதொடர்பாக சி.பி.ஐ. கடந்த 2017-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகிறது. கருப்பு பண மோசடி சட்டத்தின்கீழ் அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கிறது.

இது தொடர்பான வழக்குகளின் விசாரணை, டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே கடந்த மார்ச் 5-ந் தேதி நடைபெற்ற விசாரணையின்போது, வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டும் என்று சி.பி.ஐ.க்கு நீதிபதி எம்.கே.நாக்பால் உத்தரவிட்டார். அந்த உத்தரவுக்கு எதிராக சி.பி.ஐ. டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. அந்த மனு நீதிபதி சுரேஷ் கெய்த் அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது சி.பி.ஐ. தரப்பில் வக்கீல் அனுபம் எஸ்.சர்மா ஆஜராகி, ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டும் என்று சி.பி.ஐ. விசாரணை கோர்ட்டு தவறாக உத்தரவிட்டுள்ளது. சி.பி.ஐ. குற்றப்பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்களை மட்டுமே கேட்டுப்பெறுவதற்கு குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு உரிமையுள்ளது. அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களை கேட்டுப்பெற முடியாது என வாதிட்டார்.

அதையடுத்து நீதிபதி சுரேஷ் கெய்த், எந்த நோக்கத்துக்காக கைப்பற்றப்பட்ட ஆவணங்களை வைத்துள்ளீர்கள்? எனக் கேட்டார். அதற்கு பதில் அளித்த வக்கீல் அனுபம் எஸ்.சர்மா, ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேட்டில் பெரிய அளவிலான கூட்டுச்சதி குறித்த புலன்விசாரணை நடைபெற்றுவருகிறது என்றார்.

வாதங்களைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி, சி.பி.ஐ. கோர்ட்டில் நடைபெறும் ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கு விசாரணைக்கும், அனைத்து ஆவணங்களையும் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு வழங்கவேண்டும் என்ற உத்தரவுக்கும் இடைக்கால தடை விதித்தார். சி.பி.ஐ. மனு தொடர்பாக பதில் அளிக்க ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட எதிர்மனுதாரர்களுக்கு உத்தரவிட்டார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு