புதுடெல்லி,
ஈரானுக்கும், அமெரிக்கா-இஸ்ரேலுக்கும் இடையிலான போர் ஒரு மாதத்திற்கும் மேலாக நீடித்து வந்தது.ஹார்முஸ் நீரிணையை 6-ந்தேதி இரவுக்குள் திறக்காவிட்டால், ஈரானில் மின்சார நிலையங்கள், பாலங்கள் போன்ற சிவில் உள்கட்டமைப்புகளை தகர்ப்போம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்திருந்தார். இந்த கெடுவை இரவு 8 மணிவரை (அமெரிக்க நேரப்படி) டிரம்ப் நீடித்தார்.
இந்த கெடு முடிந்த பிறகும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்காவிட்டால் ஈரான் நாகரிகம் இன்றிரவு அழிக்கப்படும். அவர்களால் மீண்டெழ முடியாது. இதை நான் விரும்பவில்லை. ஆனால் இதை தவிர வேறு வழியில்லை. ஈரானில் முழுமையான ஆட்சி மாற்றம் ஏற்படும். மதவாத சக்திகள் அழிக்கப்படும். அந்த நாட்டில் புதிய புரட்சி மலரும். ஈரானின் 47 ஆண்டு கால அராஜகத்துக்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைக்கப்படும்” என்று அறிவித்து இருந்தார்.அமெரிக்காவின் தாக்குதலை எதிர்கொள்ள மின் நிலையங்கள் முன்பாக ஈரான் மனித சங்கிலியாக அணி திரண்டனர்.
அமெரிக்காவின் கெடு முடிய சுமார் 90 நிமிடங்கள் மட்டுமே இருந்தது. இந்திய நேரப்படி அதிகாலை 5.30 மணிக்கு ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா தயாராக இருந்தது.இந்த நிலையில் இடைக்கால போர் நிறுத்த முயற்சியில் பாகிஸ்தான் தீவிரமாக செயல்பட்டது. அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப். அமெரிக்கா மற்றும் ஈரான் தலைவர்களுடன் தொலைபேசி வழியாக அவர் பேச்சுவார்த்தை மேற்கொண்டதாக தகவல் வெளியானது. இதையடுத்து அமெரிக்கா - ஈரான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டது. இரண்டு வார காலத்திற்கு தற்காலிகமாக போர் நிறுத்தம் ஏற்பட்ட நிலையில் பாகிஸ்தானில் இருநாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்கா - ஈரான் இடையே ஏற்பட்டுள்ள இந்த தற்காலிக போர் நிறுத்தத்தை பல்வேறு நாடுகளும் வரவேற்றுள்ளன. அந்த வகையில், இந்தியாவும் வரவேற்பு தெரிவித்துள்ளது.இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் இது தொடர்பாக கூறியிருப்பதாவது: ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் நிறுத்தத்தை இந்தியா வரவேற்கிறது. இது மேற்கு ஆசியாவில் நிலையான அமைதிக்கு வழிவகுக்கும். மத்திய கிழக்கு போர் உலகளாவிய எரிசக்தி விநியோகம், வர்த்தக வலைப்பின்னல்களை சீர்குலைத்துள்ளது. ஆகவே ஹார்முஸ் ஜலசந்தி வழியாக தடையற்ற கப்பல் போக்குவரத்தை எதிர்பார்க்கிறோம்" என்று தெரிவித்துள்ளது.