புதுடெல்லி,
ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தும் வகையில் தமிழக அரசு பிறப்பித்த அவசர சட்டத்தை ரத்து செய்யக்கோரி பீட்டா அமைப்பு சுப்ரீம் கோர்ட்டில் கடந்த ஜனவரி மாத இறுதியில் ரிட் மனு தாக்கல் செய்தது. மராட்டிய மாநில அரசு கொண்டுவந்த சட்டத்திற்கும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பான தொடர்ச்சியான வழக்கு விசாரணை இன்று நடைபெற்ற போது, சட்டத்தை இயற்ற மத்திய அரசை போன்று மாநில அரசுக்கும் உரிமை உண்டு, பாரம்பரிய ஜல்லிக்கட்டை பாதுகாக்க அரசியல் சாசன பிரிவு 29(1)ல் பாதுகாப்பு உள்ளது.
மிருகவதை சட்டத்துக்கு எந்த வகையிலும் தமிழக அரசின் சட்டம் எதிரானது இல்லை என அரசு தரப்பில் வாதிடப்பட்டது. இருதரப்பு விசாரணையை அடுத்து ஜல்லிக்கட்டுக்கு இடைக்கால தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்துவிட்டது. இதனால் 2018ம் ஆண்டு பொங்கல் பண்டிகையின்போது வழக்கம்போல் ஜல்லிக்கட்டு நடைபெறும். தமிழக அரசின் சட்டம் மிருகவதை தடை சட்டத்தை மீறுவதாக உள்ளதா இல்லையா? ஆகிய அம்சங்கள் இந்த வழக்கில் விசாரிக்கப்பட வேண்டி உள்ளது என்பன உள்ளிட்ட அம்சங்களை குறிப்பிட்ட சுப்ரீம் கோர்ட்டு வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுதான் இவற்றை விசாரிக்க முடியும் என்றது.
ஜல்லிக்கட்டு வழக்கு விசாரணையை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உள்ளது. சுப்ரீம்கோர்ட்டு நீதிபதிகள் எழுப்பியுள்ள கேள்விகள் மற்றும் அரசியல் சாசன அமர்வு கருத்தில் கொள்ளவேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து தீர்ப்பு வெளியிட கணிசமான நேரம் எடுத்து கொள்ளலாம் என பார்க்கப்படுகிறது.