புதுடெல்லி,
குஜராத் மாநில பயங்கரவாத தடுப்பு போலீஸ் படையினர், 3 நாட்களுக்கு முன் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடைய பயங்கரவாதிகள் என கருதப்படுகிற 2 பேரை கைது செய்தனர்.
அவர்களில் ஒருவர், பாரூச் மாவட்டம், அங்களேஷ்வர் நகரில் உள்ள சர்தார் பட்டேல் ஆஸ்பத்திரியில் தொழில் நுட்ப உதவியாளராக வேலை பார்த்தவர் என்று முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த ஆஸ்பத்திரியுடன் காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது பட்டேல் 1979-ம் ஆண்டில் இருந்து நெருங்கிய தொடர்பில் இருந்து வந்துள்ளதாகவும், அதன் அறங்காவலராக இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இது பற்றி பா.ஜனதா மூத்த தலைவரும், மத்திய மந்திரியுமான முக்தர் அப்பாஸ் நக்வி டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய ஒரு ஆஸ்பத்திரியுடன் அகமது பட்டேலுக்கு நெருங்கிய தொடர்பு இருந்தது என்பது தற்செயல் நிகழ்வாக இருக்க முடியாது. இது தொடர்பாக சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் மக்களுக்கு விளக்கம் அளிக்க கடமைப்பட்டுள்ளனர் என்று கூறினார்.