தேசிய செய்திகள்

தோல்வி பயத்தில் தொகுதிமாறி சென்றவர் என்னைப்பற்றி பேசுவதா? நமச்சிவாயத்துக்கு நாராயணசாமி கண்டனம்

தோல்வி பயம் காரணமாக தொகுதி மாறி சென்றவர் என்னைப்பற்றி பேசுவதா? என்று நமச்சிவாயத்துக்கு நாராயணசாமி கண்டனம் தெரிவித்தார்.

புதுவை முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கொரோனா சாவு

நாட்டில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 20 ஆயிரம் என்று மத்திய அரசு கூறுகிறது. ஆனால் 40 லட்சத்து 27 ஆயிரம் என்று உலக சுகாதார அமைப்பு உறுதி செய்துள்ளது. மத்திய அரசு அதை மூடி மறைக்க முயற்சி செய்கிறது. மக்களை ஏமாற்றும் விதமாக தகவல்களை மத்திய அரசு தருகிறது. எனவே அனைத்துக்கட்சி குழு இதுதொடர்பாக விசாரணை நடத்த வேண்டும். மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவின் வருகையால் புதுவைக்கு பல திட்டங்கள் வரும் நிதி கிடைக்கும் கடன்தள்ளுபடி செய்யப்படும் என்று மக்கள் எதிர்பார்த்தனர். ஆனல் ஏமாற்றமே மிஞ்சியது.

புதுவையில் சமீப காலமாக வெடிகுண்டு கலாசாரம் தலைதூக்கி உள்ளது. இதைப்பற்றி ஆட்சியாளர்கள் கவலைப்படுவதில்லை. முதல்-அமைச்சர் அமைச்சர்களின் அலுவலகங்கள் புரோக்கர்கள் மயமாகிவிட்டது. மதுபான கடைகளின் இடமாற்றத்துக்கு ரூ.10 லட்சம் வரை கைமாறுகிறது.

தோல்வி பயமா?

நான் தோல்வி பயத்தில் தேர்தலில் நிற்கவில்லை என்று அமைச்சர் நமச்சிவாயம் கூறியுள்ளார். எனது இடதுகால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை காரணமாக நான் தேர்தலில் நிற்கவில்லை. மேலும் அந்த நேரத்தில் அனைவரையும் ஒருங்கிணைக்கும் பணியிலும் ஈடுபட்டிருந்தேன். கடந்த 2014-ம் ஆண்டு சோனியாகாந்தியின் கட்டளையை ஏற்று தேர்தலில் நின்றேன். தேர்தலை கண்டு பயப்படுபவன் நான் அல்ல.

வில்லியனூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று அமைச்சராக இருந்த நமச்சிவாயம் ஏன் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடவில்லை. தோல்வி பயத்தில் அவர் மண்ணாடிப்பட்டு தொகுதிக்கு சென்றாரா? இதற்கு அவர் மக்களுக்கு பதில் சொல்ல வேண்டும். தோல்வி பயத்தில் தொகுதி மாறி சென்றவர் என்னைப்பார்த்து கேள்வி கேட்க என்ன தகுதி உள்ளது?

நாவடக்கம் தேவை

நாங்கள் ஆட்சியில் இருந்தபோது கவர்னரின் தலையீட்டை எதிர்த்தோம். அப்போது கவர்னர் மாளிகை முன்பு நடந்த போராட்டத்தில் அவர் ஏன் எங்களுடன் இருந்தார்?. அவர் தி.மு.க. ம.தி.மு.க. புதுச்சேரி மக்கள் காங்கிரஸ் தமிழ்மாநில காங்கிரஸ் காங்கிரஸ் என்று கட்சி மாறி தற்போது பா.ஜ.க.வில் உள்ளார். அடுத்து எங்கு பசுமை உள்ளதோ அங்கு செல்வார்.

அவருக்கு கட்சி தலைவர் அமைச்சர் பதவி கொடுத்து காங்கிரஸ் தலைமை அழகு பார்த்தது. அந்த கட்சிக்கு துரோகம் செய்துள்ளார். என்னை விமர்சனம் செய்வதை அவர் நிறுத்திக்கொள்ள வேண்டும். அவருடன் சென்றவர்கள் தற்போது நடுரோட்டில் நிற்கிறார்கள். ஒரு கட்சியை விட்டு வேறு கட்சிக்கு சென்றவர்களுக்கு நாவடக்கம் தேவை.

சிலிண்டர் விலை

பெட்ரோல் டீசல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. தற்போது சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது. இவற்றை மத்திய அரசு வாபஸ்பெற வேண்டும். உள்ளாட்சி தேர்தலில் பிற் படுத்தப்பட்டோர் மலைவாழ் மக்களுக்கு இடஒதுக்கீட்டை ரத்து செய்ததால் தேர்தல் நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தேர்தல் தள்ளிப்போவதற்கு ஆளும் கூட்டணி அரசு தான் காரணம்.

இவ்வாறு நாராயணசாமி கூறினார்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...