புதுடெல்லி,
அரசு பணிகளில் எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீட்டின் பலனை வழங்குவது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு 2006-ம் ஆண்டு எம். நாகராஜ் வழக்கில் ஒரு தீர்ப்பை வழங்கியது.
அப்போதைய தலைமை நீதிபதி ஒய்.கே. சபர்வால் தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வு வழங்கிய அந்த தீர்ப்பில், பதவி உயர்வில் எஸ்.சி., எஸ்.டி., வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டியது கட்டாயம் அல்ல. அப்படி வழங்கியாக வேண்டிய நிர்ப்பந்தம் இருந்தால், 50 சதவீத உச்ச வரம்பை மீறக்கூடாது; மேலும், அவர்களின் பின்தங்கிய நிலை- அதாவது வசதி படைத்தவர்களா, ஏழைகளா என்பது பற்றிய தகவல்களை சேகரிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகளை விதித்தது.
இந்த தீர்ப்பை 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு மறுஆய்வு செய்ய உத்தரவிட வேண்டும் என்று கோரி சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு தரப்பினரும் வழக்குகளை தொடுத்தனர்.
இந்த வழக்குகளை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் நீதிபதிகள் குரியன் ஜோசப், ஆர்.எப். நாரிமன், சஞ்சய் கிஷன் கவுல், இந்து மல்கோத்ரா ஆகியோரை கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது. இந்த வழக்குகளின் விசாரணை முடிந்து கடந்த மாதம் 30-ந் தேதி தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அரசியல் சாசன அமர்வு, 2006-ம் ஆண்டின் தீர்ப்பை மறு ஆய்வு செய்ய 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு அனுப்ப தேவையில்லை என்று நேற்று ஒருமனதாக தீர்ப்பு அளித்தது. அமர்வின் சார்பில் நீதிபதி ஆர்.எப். நாரிமன் 58 பக்க தீர்ப்பினை எழுதி உள்ளார்.
தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் வருமாறு:-
* எஸ்.சி., எஸ்.டி., வகுப்பினருக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்றால், அவர்களின் பின்தங்கிய நிலை- அதாவது அவர்கள் வசதியானவர்களா, வசதியற்றவர்களா என்பது பற்றிய தகவல்களை சேகரிக்க வேண்டும் என்று 2006-ம் ஆண்டு வழங்கிய தீர்ப்பில் கூறி இருப்பது 1992-ம் ஆண்டின் இந்திரா சாஹ்னி வழக்கின் (மண்டல் கமிஷன் வழக்கின்) தீர்ப்புக்கு முரணானது.
எனவே அந்த அம்சம் செல்லாது. எஸ்.சி., எஸ்.டி., வகுப்பினருக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீடு அளிப்பதற்கு, அவர்களின் பின்தங்கிய நிலை பற்றிய புள்ளி விவரங்களை சேகரிக்க தேவை இல்லை.
* எஸ்.சி., எஸ்.டி., வகுப்பினர், சமூகத்தின் நலிவடைந்த பிரிவுகளில் மிகவும் பின்தங்கிய பிரிவினராக உள்ளனர். எனவே அவர்களை பின்தங்கிய பிரிவினராகவே கருத வேண்டி உள்ளது.
* ஒவ்வொரு பதவி உயர்வு வழங்குகிறபோதும், நிர்வாக செயல்திறன் கருத்தில் கொள்ளப்பட வேண்டும்.
* இட ஒதுக்கீட்டின் அடிப்படை நோக்கமே சமூகத்தின் பின்தங்கிய வகுப்பினர் முன்னேற வேண்டும் என்பதுதான். அப்போதுதான் அவர்கள் சமூகத்தின் மற்ற வகுப்பினருடன் கை கோர்த்துக்கொண்டு சம அடிப்படையில் பீடு நடை போட முடியும். இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
எஸ்.சி., எஸ்.டி., வகுப்பினருக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்குவதற்கு அவர்களின் பின்தங்கிய நிலை பற்றிய தகவல்களை சேகரிக்க தேவையில்லை என்று கூறி இருப்பதால், அந்த வகுப்பினர் அனைவருக்கும் இட ஒதுக்கீடு வழங்க வழி பிறந்துள்ளது. இது அந்த சமூகத்தினரின் வரவேற்புக்கு உரியதாக அமைந்துள்ளது.
இந்த தீர்ப்பை பகுஜன் சமாஜ் கட்சித்தலைவர் மாயாவதி வரவேற்று கருத்து தெரிவித்துள்ளார். அவர் இதுபற்றி கூறுகையில், அரசு பணிகளில் பதவி உயர்வில் எஸ்.சி., எஸ்.டி., வகுப்பினருக்கு இட ஒதுக்கீட்டை அமல்படுத்த மத்திய, மாநில அரசுகளுக்கு இந்த தீர்ப்பு, 2006-ம் ஆண்டுக்கு முன்பு இருந்ததுபோன்ற சுதந்திரம் தந்துள்ளது. அவர்களின் பின்தங்கிய நிலை பற்றிய தகவல்களை சேகரிக்க வேண்டும் என்ற நிபந்தனையும் இப்போது இல்லை என்று தெரிவித்தார்.
மேலும் அவர் கூறும்போது, மத்திய அரசானது இந்த வகுப்பினரின் உண்மையான நலம்விரும்பி என்றால், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பினை அவர்களுக்கு சாதகமான முறையில் நடைமுறைப்படுத்துமாறு மாநில அரசுகளுக்கும், சம்மந்தப்பட்ட துறைகளுக்கும் கடிதம் எழுத வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.