தேசிய செய்திகள்

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மருத்துவமனையில் அனுமதி

புராஸ்டேட் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், ஆனால் தற்போது அதிலிருந்து முழுமையாக மீண்டு வந்து உள்ளதாக நெதன்யாகு குறிப்பிட்டிருந்தார்.

ஜெருசலேம்,

இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நேற்று மாலை 'ஹடாசா ஐன் கெரெம்' மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்குப் பல் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 76 வயதாகும் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் உடல்நிலை குறித்துப் பல்வேறு வதந்திகள் பரவி வந்ததோடு, அவரது உடல்நிலை தொடர்பான உண்மைகளை அரசு மறைப்பதாக எதிர்க்கட்சிகளும் பொதுமக்களும் விமர்சித்து வந்தனர். இந்த நிலையில், கடந்த மாதம் நெதன்யாகு ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டிருந்தார்.

அறுவைச் சிகிச்சை

அதில், தான் புராஸ்டேட் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், ஆனால் தற்போது அதிலிருந்து முழுமையாக குணமடைந்துவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். தனது உடல்நலக் குறைவு குறித்த தகவல்களை ஈரான் நாடு தனது போர்ப் பிரசாரத்திற்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளக்கூடும் என்ற காரணத்தினாலேயே, இவ்வளவு நாட்களாக இந்தத் தகவலை ரகசியமாக வைத்திருந்ததாக நெதன்யாகு விளக்கம் அளித்திருந்தார்.

நெதன்யாகுவின் மருத்துவ அறிக்கையின்படி, கடந்த 2024 டிசம்பர் மாதம், ஹதாசா மருத்துவமனையில் நெதன்யாகுவுக்கு புராஸ்டேட் புற்றுநோய்க்கான அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டதாக மருத்துவ அறிக்கையும் வெளியிடப்பட்டது.

இதற்கு முன்னதாக, 2023 ஜூலையில் நெதன்யாகுவுக்கு பேஸ்மேக்கர் பொருத்தும் இதய அறுவைச் சிகிச்சையும், 2024 மார்ச்சில் குடல் இறக்க அறுவைச் சிகிச்சையும் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.