ஆக்ரா,
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூ, 6 நாட்கள் அரசு முறை பயணமாக, தன் மனைவி சாரா மற்றும் 130 பிரதிநிதிகள் அடங்கிய குழுவுடன் இந்தியாவுக்கு வந்துள்ளார்.
உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகாலை இஸ்ரேல் பிரதமர் நேற்று சுற்றிப்பார்த்தார். இதற்காக, டெல்லியில் இருந்து தன் மனைவி மற்றும் குழுவுடன் விமானம் மூலம் ஆக்ராவுக்கு அவர் வந்தார். அவரை விமான நிலையத்தில், உத்தரபிரதேச மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் வரவேற்றார். நாட்டுப்புற கலைஞர்கள், இஸ்ரேல் பிரதமருக்கு பாரம்பரிய வரவேற்பு அளித்தனர்.
பின்னர், ஓட்டலுக்கு சென்ற பெஞ்சமின் நேட்டன்யாஹூ சிறிது நேரம் ஓய்வெடுத்தார்.
மனைவி சாராவுடன், அவர் தாஜ்மகாலுக்கு சென்றார். தாஜ்மகாலை இருவரும் சுற்றிப்பார்த்தனர். தாஜ்மகாலின் முன்புறத்தில் உள்ள இருக்கையில் அமர்ந்து இருவரும் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
இஸ்ரேல் பிரதமர், புகைப்படக்காரர்களுக்கு மிகுந்த ஒத்துழைப்பு கொடுத்து தாராளமாக போஸ் கொடுத்தார். மனைவியுடன் அவர் ஒரு மணி நேரம் தாஜ்மகாலில் இருந்தார். அவருடன் யோகி ஆதித்யநாத், தாஜ்மகாலுக்கு செல்லவில்லை.
இஸ்ரேல் பிரதமர் வருகையை முன்னிட்டு, தாஜ்மகாலில் 2 மணி நேரம் சுற்றுலா பயணிகள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. அவர் வருகைக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பே டிக்கெட் கவுண்ட்டர் மூடப்பட்டது.
அவர் பயணம் செய்த 5 கி.மீ. தூரமும் மூடி சீல் வைக்கப்பட்டது. மத்திய ஆயுதப்படை போலீஸ், விரைவு அதிரடிப்படை, மாநில போலீஸ் ஆகியவற்றை சேர்ந்த 1,500-க்கும் மேற்பட்ட வீரர்கள் 5 கி.மீ. தூரம் முழுவதும் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டனர்.
இதற்கிடையே, பிரதமர் நரேந்திர மோடிக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூ, கடல் நீரை சுத்திகரிக்கும் கேல் என்ற அதிநவீன ஜீப்பை இன்று பரிசாக அளிக்கிறார். இதன் மதிப்பு ரூ.72 லட்சம் ஆகும். இந்த ஜீப் ஏற்கனவே இஸ்ரேலில் இருந்து டெல்லிக்கு வந்து விட்டது.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் பிரதமர் மோடி இஸ்ரேலுக்கு சென்றிருந்தபோது, நேட்டன்யாஹூவுடன் அந்த ஜீப்பில்தான் மத்திய தரைக்கடல் பகுதியில் ஒல்கா கடற்கரையில் சவாரி செய்தார்.
இன்று நடக்கும் நிகழ்ச்சியில், அந்த ஜீப் கடல் நீரை சுத்திகரிக்கும் விதத்தை இருவரும் வீடியோ கான்பரன்ஸ் மூலம் பார்வையிடுகிறார்கள். பின்னர், அந்த ஜீப், மோடிக்கு பரிசாக அளிக்கப்படுகிறது.
அதை வைத்து, நாள் ஒன்றுக்கு 20 ஆயிரம் லிட்டர் கடல் நீரையும், 80 ஆயிரம் லிட்டர் மாசடைந்த ஆற்று நீரையும் தூய்மைப்படுத்த முடியும் என்று தெரிகிறது.