பெங்களூரு,
கர்நாடகாவின் பெங்களூரு நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு இஸ்ரோ தலைவர் சிவன் பேசும்பொழுது, ககன்யான் திட்டம் ஆனது விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் திட்டம் என்பதோடு நில்லாமல், நீண்டகால தேசிய மற்றும் சர்வதேச அளவிலான ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்பு ஆகியவற்றுக்கான கட்டமைப்பினை உருவாக்கும் வாய்ப்பினை நமக்கு வழங்கும்.
அறிவியல் கண்டுபிடிப்புகள், பொருளாதார வளர்ச்சி, கல்வி, தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் இளைஞர்களுக்கு ஊக்கமளிக்கும் விசயம் ஆகியவை அனைத்து நாடுகளுக்கும் உள்ள இலக்குகள் என்று நாம் அனைவரும் அறிவோம். விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் திட்டம் ஆனது இந்த இலக்குகள் அனைத்திற்கும் சரியான தளத்தினை வழங்கும்.
ககன்யான் திட்டத்திற்காக இந்தியாவில் இருந்து 4 விண்வெளி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு இந்த மாத இறுதியில் ரஷ்யாவிற்கு பயிற்சிக்காக அனுப்பி வைக்கப்படுவர். கடந்த 1984ம் ஆண்டு ரஷ்ய விண்கலத்தில் இந்தியரான ராகேஷ் சர்மா பயணம் செய்துள்ளார். ஆனால் இந்த முறை இந்திய விண்வெளி வீரர்கள் இந்தியாவில் இருந்து இந்திய விண்கலத்தில் விண்வெளிக்கு பயணம் செய்ய உள்ளனர். இதேபோன்று சந்திரயான்-3ற்கான திட்ட பணிகள் தொடங்கி முழு வீச்சில் நடந்து வருகின்றன என்று அவர் கூறியுள்ளார்.