காசியாபாத்,
பீகாரின் பக்சார் மாவட்ட கலெக்டராக இருந்தவர் முகேஷ் பாண்டே. மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான இவர் உத்தரபிரதேசத்தின் காசியாபாத் ரெயில் நிலையத்துக்கு அருகே நேற்று முன்தினம் இரவு தண்டவாளத்தில் பிணமாக கிடந்தார். அவர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. அவரது உடலுக்கு அருகே கடிதம் ஒன்றும் கிடந்தது.
அதில், நான் வாழ்க்கையில் நம்பிக்கை இழந்து விரக்தியில் உள்ளேன். எனவே மேற்கு டெல்லியின் ஜனக்புரி பகுதியில் உள்ள வணிக வளாகத்தின் 10வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்யப்போகிறேன். எனது விரிவான தற்கொலை கடிதம் டெல்லியில் உள்ள 5 நட்சத்திர ஓட்டலின் (பெயரையும் குறிப்பிட்டு இருந்தார்) 742வது அறையில் உள்ளது. உங்கள் அனைவரையும் நேசிக்கிறேன். தயவு செய்து என்னை மன்னியுங்கள் என எழுதப்பட்டு இருந்தது.
முன்னதாக டெல்லி ஓட்டலில் தங்கியிருந்த முகேஷ் பாண்டே, தான் தற்கொலை செய்யப்போவதாக தனது நண்பர்களுக்கு தகவல் தெரிவித்து இருந்தார். எனவே இது குறித்து அவரது நண்பர் ஒருவர் டெல்லி போலீசுக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் அந்த வணிக வளாகத்துக்கு போலீசார் சென்று முகேஷ் பாண்டேவை தேடினர்.
ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னர் அங்குள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது, அவர் அந்த வணிக வளாகத்தில் இருந்து வெளியேறி அருகில் உள்ள மெட்ரோ ரெயில் நிலையத்துக்கு சென்றிருந்தது தெரியவந்தது. அங்கிருந்து ரெயில் மூலம் காசியாபாத் வந்து, அங்கு தற்கொலை செய்திருக்கலாம் என தெரிகிறது.
முகேஷ் பாண்டேவின் உடலை கைப்பற்றிய ரெயில்வே போலீசார், பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
2012ம் ஆண்டு பிரிவை சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான முகேஷ் பாண்டே அசாமின் பாமுனிமைதான் பகுதியை சேர்ந்தவர். ஐ.ஏ.எஸ். தேர்வில் 14வது இடத்தை பிடித்ததன் மூலம் அசாமுக்கு பெருமை தேடித்தந்தார். அவரது மரணம், சொந்த ஊர் மற்றும் அசாம் முழுவதும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
முகேஷின் தற்கொலை குறித்து அவரது தந்தை டாக்டர் சுதேஷ்வர் பாண்டே கண்ணீருடன் கூறுகையில், முகேஷ் பாண்டே தற்கொலை செய்வதற்காக டெல்லியில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கியிருப்பதாக நேற்று (நேற்று முன்தினம்) மாலை 5.48 மணிக்கு வாட்ஸ்அப் மூலம் அறிந்தேன். எனவே இது குறித்து போலீசாருக்கு தெரிவித்தேன். ஆனால் அவரது மரண செய்தியைத்தான் தொலைக்காட்சி சேனல்கள் மூலம் அறிய முடிந்தது என்றார்.
தற்கொலை செய்துகொண்ட கலெக்டர் முகேஷ் பாண்டேவின் குடும்பத்தினருக்கு பீகார் முதல்மந்திரி நிதிஷ்குமார் இரங்கல் தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், முகேஷ் பாண்டேவின் மரணம் நெஞ்சை மிகவும் உருக்குவதாக உள்ளது. திறன் மிகுந்த நிர்வாகியான அவர் முக்கியமான அதிகாரியாக இருந்தார். அவரது ஆன்மா சாந்தியடையட்டும் என்று கூறியுள்ளார்